சமையலில் மணத்துக்காக பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் பட்டைக்கும் தனி இடம் உண்டு. பிரியாணி முதல் மசாலா டீ வரை பல உணவுகளில் இது சேர்க்கப்படுகிறது. ஆனால் கடைகளில் கிடைக்கும் பட்டை அனைத்தும் ஒரே வகையைச் சேர்ந்தது அல்ல. சிலோன் பட்டை, காசியா பட்டை என இரண்டு முக்கிய ரகங்கள் சந்தையில் உள்ளன.
இரண்டு பட்டைகளுக்கும் என்ன வித்தியாசம்?
சிலோன் பட்டை பொதுவாக மெல்லிய பல அடுக்குகளாகச் சுருட்டப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு சுருள் போலவும், கைகளால் எளிதில் உடைக்கக்கூடியதாகவும் இருக்கும். காசியா பட்டை தடிமனாகவும் கடினமாகவும், பொதுவாக ஒரே அடுக்காகவும் காணப்படும்.
காசியா பட்டையில் கூமரின் என்ற சேர்மம் அதிகமாக இருப்பதாகவும், அதை அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்வது குறித்து கவனம் தேவை.
நிறம், சுவையிலும் வித்தியாசம்
அசல் சிலோன் பட்டை பொதுவாக வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் சுவையில் லேசான இனிப்பும் மென்மையான வாசனையும் தெரியும். காசியா பட்டை அடர் பழுப்பு நிறத்தில் இருப்பதுடன், சற்று காட்டமான சுவையைக் கொண்டிருக்கும்.
பட்டை கையில் எளிதாக உடைகிறதா, அதன் அடுக்குகள் எப்படி இருக்கின்றன என்பதையும் வாங்கும்போது கவனிக்கலாம்.
தூள் பட்டையை எப்படி சோதிப்பது?
பட்டை தூள் வடிவில் வாங்கும்போது அதன் உண்மைத்தன்மையை பார்ப்பது சற்று சிரமம். இதற்காக அயோடின் திரவத்தைப் பயன்படுத்தும் வீட்டுப் பரிசோதனை செய்யலாம். ஒரு சிறிய அளவு பட்டைத் தூளில் சில சொட்டு அயோடின் சேர்க்கும்போது அடர் நீல நிற மாற்றம் ஏற்பட்டால், அது கலப்படமாக இருக்கலாம்.
எனவே பட்டையை வாங்கும்போது விலை மட்டும் பார்க்காமல், அதன் தோற்றம், அடுக்குகள், நிறம் மற்றும் தரத்தையும் கவனிப்பது அவசியம்.
