இயற்கையான இனிப்புச் சுவையுடன் கிடைக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, குழந்தைகளின் உணவுப் பட்டியலில் சேர்க்கக்கூடிய சத்தான உணவுகளில் ஒன்று.
இதில் மாவுச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. குறிப்பாக ஆரஞ்சு நிற சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால், அது உடலில் வைட்டமின் ஏ-வாக மாற்றப்படுகிறது.
குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துக்கள்
100 கிராம் வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கில் சுமார் 70 முதல் 90 கலோரிகளும், 15 முதல் 21 கிராம் வரை மாவுச்சத்தும் இருக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுவதுடன், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் துணைபுரிகிறது.
வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் போன்ற சத்துக்களும் இதில் கிடைக்கின்றன. வைட்டமின் ஏ குழந்தைகளின் பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு முக்கியமானது.
எப்படி கொடுத்தால் சத்தாக இருக்கும்?
சர்க்கரைவள்ளிக் கிழங்கை தனியாக மட்டும் கொடுப்பதைவிட, பருப்பு, முட்டை, தயிர் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்துக் கொடுப்பது சிறந்தது. மெலிந்த குழந்தைகளுக்கு சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்தும் வழங்கலாம்.
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப வேகவைத்து மசித்து கூழாகவும், பாசிப்பருப்புடன் சேர்த்த மசியலாகவும் தயாரிக்கலாம். ராகி அல்லது அரிசி மாவுடன் கலந்து சிறிய அடையாகவும் செய்து கொடுக்கலாம்.
அதிகமாக கொடுத்தால் என்ன ஆகும்?
சர்க்கரைவள்ளிக் கிழங்கு நல்ல உணவாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக கொடுப்பது சரியல்ல. சில குழந்தைகளுக்கு அதிகமாக சாப்பிடும்போது வயிற்றுப்பெருக்கு அல்லது வாயுத் தொல்லை ஏற்படலாம்.
மேலும் இதில் புரதம் மற்றும் இரும்புச்சத்து குறைவாக இருப்பதால், இதை மட்டுமே நம்பாமல் பல்வேறு சத்தான உணவுகளுடன் சேர்த்து கொடுப்பதே சரியான அணுகுமுறையாகும்.
