சைட் டிஷ் தேவையில்லை… 10 நிமிடத்தில் மென்மையான வெங்காய சப்பாத்தி!

Published On:

| By Minnambalam Desk

காலை நேரத்தில் அவசரமாக வேலைக்குக் கிளம்ப வேண்டும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற சூழலில் தினமும் என்ன சமையல் செய்வது என்பதே பெரிய கேள்வியாகிவிடும். அந்த நேரத்தில் அதிக வேலை இல்லாமல் செய்து முடிக்கக்கூடிய உணவு என்றால் இந்த வெங்காய சப்பாத்தியை முயற்சி செய்யலாம்.

வழக்கமான சப்பாத்தியில் சிறிய மாற்றமாக வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சில மசாலாப் பொருட்களை சேர்த்தால் நல்ல மணத்துடன் சுவையான சப்பாத்தி தயார். முக்கியமாக இதற்கு தனியாக குருமா அல்லது வேறு சைட் டிஷ் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. 

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்

இரண்டு கப் கோதுமை மாவுடன் ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், அரை ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, அரை டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலா, சிறிதளவு மஞ்சள் தூள், கொத்தமல்லி, உப்பு மற்றும் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் சேர்க்கலாம்.

மாவு பிசைவதில் கவனம்

ADVERTISEMENT

மாவுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்த பிறகு உடனடியாக தண்ணீர் ஊற்றக்கூடாது. வெங்காயத்தில் இருக்கும் நீர்ச்சத்து காரணமாக மாவு ஏற்கனவே ஈரமாகிவிடும். முதலில் நன்றாகப் பிசைந்து, பின்னர் தேவையான அளவு மட்டும் தண்ணீர் தெளித்து மென்மையான மாவாக தயாரிக்க வேண்டும்.

கடைசியில் சிறிது எண்ணெய் தடவி, மாவை 15 முதல் 20 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். 

தோசைக்கல்லில் சுட்டெடுப்பது எப்படி?

ஊறிய மாவை சற்று பெரிய உருண்டைகளாகப் பிரித்து, வழக்கமான சப்பாத்தியைவிட சற்று தடிமனாகத் திரட்ட வேண்டும். வெங்காயம் இருப்பதால் மிகவும் மெல்லியதாகத் திரட்டினால் கிழியும் வாய்ப்பு உள்ளது.

சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் அல்லது நெய் விட்டு மிதமான தீயில் வேகவைக்க வேண்டும். இருபுறமும் பொன்னிறப் புள்ளிகள் தோன்றியதும் சுடச்சுட எடுத்தால் போதும்.

கெட்டித் தயிர் அல்லது ஊறுகாயுடன் சாப்பிடலாம். லஞ்ச் பாக்ஸுக்கும் இது ஏற்ற உணவாக இருக்கும்; ஆறிய பிறகும் மென்மையாக இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. 


Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share