தலைக்கு எண்ணெய் தேய்ப்பது நம் பாரம்பரியத்தில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் பழக்கம். ஆனால் எண்ணெயை எப்படித் தேய்க்கிறோம் என்பதிலும் கவனம் தேவை. சில வழக்கமான தவறுகள் முடிக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
சுத்தமான தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும்
அழுக்கு மற்றும் அதிக பிசுபிசுப்புடன் இருக்கும் தலைமுடியில் எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. சுத்தமான, காய்ந்த உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது முக்கியம். குளிர்ந்த எண்ணெய்க்குப் பதிலாக லேசாக வெதுவெதுப்பாக்கிய எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
உச்சந்தலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
எண்ணெயை தலைமுடியின் நுனியில் மட்டும் தடவுவதைவிட, உச்சந்தலையில் சரியாகப் பயன்படுத்துவதுதான் முக்கியம். அதே நேரத்தில் அதிகப்படியான எண்ணெயை ஊற்ற வேண்டிய அவசியமில்லை. அதிக எண்ணெய் பயன்படுத்தினால் அதை அகற்ற அதிக ஷாம்பு தேவைப்படலாம். இதனால் முடி வறண்டு போக வாய்ப்புள்ளது.
நகங்களால் தேய்க்க வேண்டாம்
எண்ணெய் தேய்க்கும்போது பலரும் நகங்களால் உச்சந்தலையை அழுத்தித் தேய்ப்பார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். விரல் நுனிகளின் மென்மையான பகுதியை வைத்து மெதுவாக வட்ட வடிவில் மசாஜ் செய்வது சரியான முறையாகக் கூறப்படுகிறது. வேகமாகவும் அழுத்தமாகவும் தேய்ப்பதையும் தவிர்க்கலாம்.
எண்ணெய் வைத்த பிறகு செய்யக்கூடாதவை
எண்ணெய் தேய்த்த உடனே சீப்பு பயன்படுத்துவது முடி உதிர்வை அதிகரிக்கக்கூடும். அதேபோல், இரவு முழுவதும் எண்ணெய் வைத்திருப்பதைவிட 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வைத்திருப்பது போதுமானதாகக் கூறப்படுகிறது. பின்னர் மிதமான வெந்நீர் மற்றும் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசலாம். எண்ணெய் வைத்த பிறகு தலைமுடியை இறுக்கமாகக் கட்டாமல் தளர்வாக வைத்திருப்பதும் அவசியம்.
