முகப்பரு, கரும்புள்ளி, வறண்ட சருமம், அதிக எண்ணெய் சுரப்பு போன்ற சருமப் பிரச்சினைகள் பலருக்கும் கவலையை ஏற்படுத்துகின்றன. இதனால் சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பயன்படுத்தும் விலையுயர்ந்த சருமப் பராமரிப்புப் பொருட்களை வாங்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது.
ஆனால், ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கு விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே தீர்வு அல்ல. அன்றாட வாழ்க்கையில் சில எளிய பழக்கங்களைப் பின்பற்றினாலே சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
முகத்தை அளவாகச் சுத்தம் செய்யுங்கள்
முகத்தை தினமும் காலை மற்றும் இரவு என இரண்டு முறை, மிதமான ஃபேஸ் வாஷ் அல்லது மென்மையான சோப்பைப் பயன்படுத்தி கழுவுவது போதுமானது.
அடிக்கடி முகத்தைக் கழுவுவதோ அல்லது பலமாக தேய்ப்பதோ சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தி, முகப்பரு பிரச்சினையை மேலும் மோசமாக்கலாம்.
சருமத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்
சருமம் எண்ணெய் பசையுடன் இருந்தாலும் மாய்ஸ்சரைசர் தேவையில்லை என்று நினைக்கக் கூடாது.
வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் வகையையும், எண்ணெய்ப் பசை அதிகம் உள்ளவர்கள் எண்ணெய் இல்லாத (Oil-free) மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்தலாம். இது சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் பழக்கத்தை தவறவிடாதீர்கள்
வெயில் இல்லாத நாளிலும் புற ஊதாக் கதிர்கள் (UV Rays) சருமத்தை பாதிக்கக்கூடும். எனவே வெளியே செல்லும் முன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது முக்கியம்.
அதோடு, தொப்பி, கண்ணாடி போன்றவற்றைப் பயன்படுத்தி நேரடி வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்.
முகப்பருக்களை கிள்ளாதீர்கள்
முகப்பருவை உடனே நீக்க வேண்டும் என்ற ஆசையில் அதை அழுத்துவதோ, கிள்ளுவதோ தவறான பழக்கம்.
இது வீக்கத்தை அதிகரிப்பதுடன், நிரந்தர தழும்புகள் அல்லது கரும்புள்ளிகள் உருவாகும் அபாயத்தையும் ஏற்படுத்தும். பல நேரங்களில் பரு ஆறிய பிறகு ஏற்பட்ட நிறமாற்றம் தானாகவே மெல்ல மறைந்துவிடும்.
மேக்கப் பொருட்களை சுத்தமாக வைத்திருங்கள்
மேக்கப் பயன்படுத்துபவர்கள் பிரஷ்கள் மற்றும் ஸ்பாஞ்ச்களை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும், மற்றவர்களுடன் மேக்கப் பொருட்களைப் பகிர்ந்து பயன்படுத்தக் கூடாது. இரவில் தூங்குவதற்கு முன் மேக்கப்பை முழுமையாக அகற்றுவதும் அவசியம்.
தூக்கமும் மனஅழுத்தக் கட்டுப்பாடும் முக்கியம்
தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை தரமான தூக்கம் கிடைத்தால், சருமமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
அதேபோல், அதிக மனஅழுத்தம் முகப்பரு மற்றும் எக்ஸிமா போன்ற சருமப் பிரச்சினைகளை தீவிரப்படுத்தக்கூடும். யோகா, தியானம் அல்லது விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும்.
ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் அவசியம்
பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
அதேநேரம், உடற்பயிற்சி செய்வது மனஅழுத்தத்தைக் குறைத்து, நல்ல தூக்கத்தையும் அளிக்கும். இவை இரண்டும் சருமத்தின் ஆரோக்கியத்தை மறைமுகமாக மேம்படுத்துகின்றன.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
சில நேரங்களில் எளிய பராமரிப்பு முறைகள் போதுமானதாக இருக்காது. முகப்பரு தொடர்ந்து அதிகரித்தாலோ, கடுமையான எக்ஸிமா அல்லது பிற சருமப் பிரச்சினைகள் இருந்தாலோ, தோல் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெற வேண்டும்.
சமூக வலைதளங்களில் பார்க்கும் எல்லா சருமப் பராமரிப்பு முறைகளும் அனைவருக்கும் பொருந்தாது. உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ற எளிய மற்றும் பாதுகாப்பான பராமரிப்பே நீண்ட காலத்தில் நல்ல பலனைத் தரும்.
