புதுக்கோட்டை மாவட்டம் மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் மகளான சீதாலட்சுமி (19), திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு செவிலியர் பட்டயப் படிப்பு படித்து வந்தார்.
அவருக்கு மூக்கில் சதை வளர்ந்து மூச்சு விடுவதில் பிரச்சினை இருந்துள்ளது. இதன் காரணமாக அவர், 4 நாட்களுக்கு முன்னதாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவருக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்தசூழலில் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சை மற்றும் அதிகப்படியான மயக்க மருந்து கொடுத்ததே மாணவியின் மரணத்திற்கு காரணம் என சக செவிலியர் மாணவிகளும், உறவினர்களும் குற்றம்சாட்டினர்.
இன்று காலை 7 மணியளவில் திருச்சி அரசு மருத்துவமனை முன்பாக திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. மீண்டும் மாலையில் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மாணவி ஒருவர், “ஐயோ என் சீதாவை கொண்ணுட்டாங்களே… ” என கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது.
சீதாலட்சுமி மரணம் குறித்து செய்தியாளர்களிடம் போராட்டத்தில் ஈடுபடும் மாணவிகள் கூறுகையில், “. அங்க செய்யறது ஒன்னு, அந்த மெடிசின் சீட்ல எழுதுறது ஒன்னா இருக்கு. நாங்க போய் கேட்கும்போது, ‘ரெண்டே ரெண்டு இன்ஜெக்ஷன் தான் போட்டோம் என்கிறார்கள். ப்ரொசிஜர் எல்லாத்தையும் மாத்தி மாத்தி பன்றாங்கள். சீதா கூட இருந்த எங்க பயிற்சி மாணவியையும் வெளியே அனுப்பிட்டாங்க. ஹார்ட் அட்டாக் வந்து சிபிஆர் கொடுத்ததா சொல்றாங்க.
சீதா இறந்தததுக்கு அப்புறம் அவங்க அப்பாவ கூப்ட்டு பேசுறாங்க. அவருக்கு என்ன தெரியும்? . அவங்க அக்கா நர்சிங் தான் படிச்சிருந்தாங்க, அவங்களைக் கூப்ட்டு பேசலாம்ல?. பொய் பொய்யா சொல்றாங்க” என கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தநிலையில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகள் மீது கல்லூரி நிர்வாகம் எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காது என அமைச்சர் ரமேஷ் உறுதியளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றார்.
பெண் செவிலியர் உயிரிழந்த விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட விசாரணை குழு ஓரிரு நாட்களில் அறிக்கை அளிக்கும் என சுகாதரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
விசாரணை குழுவின் அறிக்கையில் மருத்துவ ரீதியிலான கவனக்குறைவு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தற்போது மாணவிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. மாணவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சக மாணவிகளுக்கு 3 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
