சேலம்: சிட்டிங் எம்பி பார்த்திபனுக்கு பதிலாக புதிய திமுக வேட்பாளர் யார்?

Published On:

| By Aara

who is the Salem New DMK MP Candidate

வருகிற மக்களவைத் தேர்தலில் திமுகவில் தூத்துக்குடிக்கு கனிமொழி, மத்திய சென்னைக்கு தயாநிதிமாறன், வேலூருக்கு கதிர் ஆனந்த் என்று நிச்சயிக்கப்பட்ட வேட்பாளர்கள் சிலர் இருந்தாலும்… கணிசமான தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்படலாம் என்று எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது.

இந்த வகையில், சேலம் மக்களவைத் தொகுதியின் தற்போதைய திமுக எம்பியான எஸ். ஆர். பார்த்திபன் மாற்றப்படுவார் என்று சேலம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சேலம் அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம்,

“எஸ். ஆர். பார்த்திபன் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். மொத்த வாக்குகளில் 48 சதவீத வாக்குகளை பார்த்திபன் பெற்றார்.

சேலம் மக்களவைத் தொகுதிக்கு தனது எம்பி நிதி மூலம் மட்டுமல்லாமல் திமுகவின் பல ராஜ்யசபா உறுப்பினர்களின் நிதியை கேட்டுப் பெற்று பல்வேறு திட்டங்களை சேலத்தில் செயல்படுத்தினார் பார்த்திபன். வருடக் கணக்கில் மூடிக் கிடந்த சேலம் விமான நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கு பெரு முயற்சியெடுத்து திறந்தார்.

அது மட்டுமல்ல சேலம் நால்ரோட்டில் அமைந்திருக்கும் அவரது அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும். அங்கே பார்த்திபன் இருந்தாலும் இல்லை என்றாலும் மருத்துவ உதவி, கல்வி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளோடு வரும் மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காணும் ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.  மேலும் தனது தனிப்பட்ட முயற்சியாக ஸ்போர்ட்ஸ் அகாடமி ஏற்படுத்தி தொகுதி முழுதும் 28 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களை அதில் உறுப்பினர்களாக்கி அமைச்சர் உதயநிதியின் பாராட்டையும் பெற்றார்.

who is the Salem New DMK MP Candidate

இவ்வாறு பார்த்திபனுக்கு ப்ளஸ் பாயின்ட்டுகள் இருந்தாலும்…  கட்சிக்குள் தனது ஆதரவாளர்களை திரட்டி தனி கோஷ்டி அரசியல் செய்கிறார் என்றும்,  கட்சிக்காரர்களுடனும், மாவட்டச் செயலாளர்களுடனும் இணைந்து செயல்படவில்லை  என்றும் அவர் மீது  புகார்களும்  சென்றன.

இதனால் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி ஆகியோருக்கும் பார்த்திபன் எம்பிக்கும்  இடைவெளி அதிகமானது.

இந்த பின்னணியில்தான் வேட்பாளர் தேர்வு என்று வரும்போது… சிட்டிங் எம்பி என்ற அடிப்படையில் பார்த்திபன் பெயர் பரிசீலிக்கப்பட்டபோது இரு மாசெக்களும் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்தனர்.  சில மூத்த அமைச்சர்கள் வழியாகவும் இந்த எதிர்ப்பை கூர்மைப்படுத்தினார்கள்.

அடுத்ததாக ஒரு பெண்ணை வேட்பாளராக நிறுத்தலாம் என்று இன்னொரு ஆலோசனை நடந்தது. வீரபாண்டி ஒன்றிய செயலாளராக இருக்கும் வெண்ணிலா சேகர் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது  ‘பென்’ சார்பில், கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டில், ‘அதிமுக வலிமையாக இருக்கும் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் ஒரு பெண்ணை நிறுத்துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இப்போது செல்வகணபதியே வேட்பாளர் என்ற தகவல் நேற்று முதல் சேலம் வட்டாரத்தில் பரவி வருகிறது. எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் செல்வகணபதியின் ஆதரவாளர்கள் ‘அண்ணன் தான் வேட்பாளர்’ என்று வாட்ஸ் அப் க்ரூப்புகளில் பகிர ஆரம்பித்துவிட்டார்கள்” என்கிறார்கள்.

சேலத்தில் திமுக வேட்பாளர் சிட்டிங் எம்பி பார்த்திபன் இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.  புதிய வேட்பாளர் யார் என்பதுதான் இப்போதைய கேள்வி.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு!

GOAT: செண்டிமெண்டாக இணைந்த முன்னணி நடிகை!

108MP கேமரா, 5000 mAh பேட்டரி… ‘கம்மி’ விலையில் அறிமுகமான புதிய ஸ்மார்ட்போன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share