டெல்லியில் 150 கோடியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு புதிய அலுவலகத்தை கட்டியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஸ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ளது. எனினும், தலைநகர் டெல்லியில் புதிய அலுவலகத்தை பிரமாண்டமாக கட்ட அந்த அமைப்பு முடிவு செய்தது. இதற்கு 5 ரூபாய் முதல் பல கோடிகள் வரை நன்கொடையாக பெறப்பட்ட பணத்தில் 150 கோடியில் டெல்லியில் கேசவ் கஞ்ச் என்ற பெயரில் புதிய அலுவலகத்தை கட்டியுள்ளது . 5 லட்சம் சதுரஅடியில் பிரமாண்டமாக 12 மாடிகளுடன் 3 டவர் எழுப்பப்பட்டுள்ளது.

இதில், சாதனா டவரில் நிர்வாக அலுவலகம் மற்றும் 8,500 புத்தகங்கள் கொண்ட லைப்ரேரி அமைந்துள்ளன. பிரெர்னா டவரில் பத்திரிகையாளர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவதுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அர்ச்சனா டவரில் நிர்வாகத்தில் உள்ள ஊழியர்கள் தங்க 80 அறைகள் உள்ளன. இது தவிர 5 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கீழ் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
80 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் வகையில் போஜனாலாயாவும் உள்ளது. முற்றிலும் சூரிய ஒளி மின்சாரத்தில் இந்த கட்டடம் இயங்கும். கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சுமார் 75 ஆயிரம் பேர் இந்த கட்டடத்தை கட்ட நன்கொடை அளித்துள்ளனர். தற்போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் 3,500 முழு நேர ஊழியர்கள் உள்ளனர்.