ரோஜா இதழ்கள் சரும பராமரிப்போடு மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன.
ரோஜா மலரை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. ரோஜா காதல், அன்பு, தூய்மை, நம்பிக்கை மற்றும் அழகின் சின்னமாகக் கருதப்படுகிறது. ரோஜா இதழ்கள் நறுமணமும் அழகும் கொண்டவை மட்டுமல்ல, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கும் அதிகமான நன்மையைத் தருகின்றன. குறிப்பாக ரோஸ் வாட்டரை (Benefits of rose water) சருமப் பராமரிப்பிற்காக பல தலைமுறைகளாக நாம் பயன்படுத்தி வருகிறோம். ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யும் நமக்கு பலனளிக்கிறது. இதேபோல ரோஜா இதழ்கள் முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. ரோஜாவில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன.
ரோஜா இதழ்களைக் கொண்டு முடியை வலுப்படுத்தும் வழிகளை இங்கே நாம் தெரிந்துகொள்வோம். ரோஜா இதழ்களை 3 விதமாக நாம் தலைக்கு பயன்படுத்தலாம்.
1) ரோஜா இதழ்களை அரைத்து விழுதாக மாற்ற வேண்டும். அதை தலை உச்சியில் தடவ வேண்டும். மெதுவாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து சீயக்காய் அல்லது ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
2) ரோஜா இதழ்களை அரைத்து அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதை வடிகட்ட வேண்டும். இந்த ரோஜா நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து, முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும். இது பொடுகைப் போக்கும், இது முடி வளர்ச்சிக்கு உதவும். 3) நன்றாக அரைத்த ரோஜா இதழ்களை கற்றாழை ஜெல்லுடன் (Aloe vera gel) நன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவைப் பயன்படுத்தி அலசி விடவும். அடிக்கடி இப்படி செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும்.
கூந்தலை பளபளப்பாக மாற்றுகிறது
ரோஜா இதழ்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடித் தண்டுகளை வலுப்படுத்துகின்றன. வைட்டமின்கள் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை அகற்றி, ஈரப்பதத்தைத் தக்கவைக்கின்றன. உச்சந்தலையில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது. இயற்கையான கண்டிஷனராகச் செயல்பட்டு, வறண்ட மற்றும் சேதமடைந்த கூந்தலுக்கு ஈரப்பதம் அளிக்கிறது. கூந்தலை மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது.
முடி உதிர்வை தடுக்க உதவுகிறது
ரோஜா இதழ்கள் முடி உதிர்வதைத் தடுக்க உதவிபுரிகின்றன. உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்து, முடியின் வேர்களை வலுப்படுத்துகின்றன. இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் (Anti-inflammatory) உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் மற்றும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்துகின்றன. pH சமநிலையைப் பராமரிக்கிறது.
பொடுகு பிரச்சனை தீரும்
ரோஜா இதழ்கள் முடிக்கும் உச்சந்தலைக்கும் முழுமையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. அவை எரிச்சலையும் அழற்சியையும் குறைக்கின்றன. ரோஜா, உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதைத் தடுக்கிறது. அது பொடுகு (dandruff) மற்றும் சமநிலையற்ற உச்சந்தலை பிரச்சனைகளை நீக்கி, முடியை வலுப்படுத்துகிறது.
அழற்சியைத் தடுக்கிறது
ரோஜா இதழ்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி3, வைட்டமின் சி (Vitamin C) மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இது அழற்சியைத் தடுக்கிறது. இது உச்சந்தலையில் ஏற்படும் எக்ஸிமா மற்றும் சொரியாசிஸ் ஆகியவற்றை நீக்குகிறது. ரோஜா நீர் தலையில் வறட்சியைப் போக்குகிறது, இது பொடுகு உருவாவதைத் தடுக்கிறது.
