ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொலை… மதிமுக மாவட்ட செயலாளர் கைது!

Published On:

| By Kumaresan M

காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளரான வளையாபதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் காலண்டர் தெரு பகுதியில் ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளரான கஸ்தூரி என்பவர்  வசித்து வந்தார். 63 வயதான இவர் வீட்டில் தனியாக வசித்தார். கஸ்தூரியின் மகன் காமேஷ் டேராடூனில் பணியாற்றி வருகிறார் . கடந்த 2020 ஆம் ஆண்டு கஸ்தூரி பணியில் இருந்து  ஓய்வு பெற்றவர். ஆனால் 35 வயதிலேயே கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி கஸ்தூரியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. தகவல் கிடைத்து வீட்டுக்கு வந்து காவல்துறையினர் பார்த்த போது, கஸ்தூரி உயிரிழந்து கிடந்துள்ளார். உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு போலீசார் அனுப்பினர். பிரேத பரிசோதனை முடிவில் கஸ்தூரி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

போலீசார் விசாரணையில், வீடு விற்பனை தொடர்பாக கஸ்தூரிக்கும் மதிமுக மாவட்ட செயலாளரான வளையாபதிக்கும் இடையே தகராறு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, வளையாபதியை போலீசார் கருக்குப்பேட்டை அருகே வைத்து பிடித்தனர். அவரிடத்தில் விசாரணை நடத்திய போது, பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கஸ்தூரிக்கும் வளையாபதிக்கும் வீடு நிலம் வாங்குவது போன்ற விஷயங்களில் பழக்கம் இருந்துள்ளது. தான் வசிக்கும் வீட்டை விற்க கஸ்தூரி முயற்சித்தார். அந்த வீட்டை தான் வாங்கிக் கொள்வதாக வளையாபதி கூறியுள்ளார். ஆனால் விலை தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அந்த ஆத்திரத்தில் கடந்த 22ஆம் தேதி கஸ்தூரியை வளையாபதி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வளையாபதியை கைது செய்து விசாரிப்பதாகவும், கொலைக்கு உடைந்தையாக இருந்த பிரபு என்பவரை தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

SHARE MARKET : உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை – கவனம் செலுத்த வேண்டிய நிறுவனங்கள் என்னென்ன?

ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது… வந்தாச்சு ஐ.என்.எஸ் நீலகிரி… ஸ்பெஷல் என்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share