பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகளை தடுக்கும் வகையில் மருந்து கலக்கும் பணிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் மே மாதம் வெயில் உக்கிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை வெயில் அதிகரித்துள்ளதால், விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பட்டாசுகளுக்கான ரசாயன மருந்து பணிகளை காலை நேரங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, மிகவும் அபாயகரமான பட்டாசு ரசாயன கலவைப் பணிகளை காலை 6 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் பட்டாசு தயாரிப்புப் பணிகள் தொழிற்சாலை விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால், பட்டாசு ரசாயன மூலப்பொருட்களை கையாள்வது, எடை போடுவது, கலவை செய்வது போன்ற பணிகளை காலை நேரங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது. பட்டாசுகளை மொத்தமாக வாங்கும் நபர்களின் விவரங்களை அடையாள அட்டைகளுடன் சேகரித்து வைக்க வேண்டும். இதனை மீறினால் பட்டாசு தயாரிப்பு கூடத்திற்கான உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
