இந்தியாவில் 7-Eleven நிறுவனத்துடன் மேற்கொண்ட ஐந்தாண்டு கால ஃபிரான்சைஸ் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் ரீடெய்ல் முடித்துக்கொள்ள உள்ளது.
லாபகரமாக இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், இரு நிறுவனங்களும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான கடைகள் மூடல்
2021-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கூட்டணி மூலம் இந்தியாவில் சுமார் 60 7-Eleven கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள் செயல்பட்டு வந்தன. தற்போது அவற்றில் பெரும்பாலான கடைகள் மூடப்பட உள்ளன.
சில கடைகளில் மீதமுள்ள பொருட்களை விற்று கையிருப்பை காலி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் தொடர்ந்து இருக்க 7-Eleven நிறுவனம் மற்றொரு கூட்டாளியைத் தேடும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாபம் தராத வணிக முறை
ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் 7-Eleven கூட்டணி தொடங்கியபோது, உலகின் மிகப்பெரிய கன்வீனியன்ஸ் ஸ்டோர் பிராண்டுகளில் ஒன்றை இந்திய சந்தையில் வேகமாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் பிராண்டட் கடைகளை இயக்குவதற்கான வாடகை, ஊழியர்கள், சரக்கு மற்றும் விநியோகச் செலவுகள் அதிகமாக இருந்த நிலையில், அதற்கேற்ற விற்பனை அளவை எட்ட முடியவில்லை. 2026 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 7-India Convenience Retail நிறுவனத்தின் வருவாய் சுமார் ரூ.92 கோடியாக இருந்த நிலையில், நிகர இழப்பு ரூ.90 கோடிக்கு அருகில் இருந்ததாக நிதிநிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
குறுக்கே நிற்கும் கீரானா, குயிக் காமர்ஸ்
இந்தியாவில் உடனடித் தேவைகளுக்கான பொருட்களை வழங்குவதில் பாரம்பரிய கீரானா கடைகள் ஏற்கெனவே வலுவான நிலையில் உள்ளன. அதே நேரத்தில், குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் சில நிமிடங்களிலேயே மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சேர்க்கின்றன.
இதனால் கன்வீனியன்ஸ் ஸ்டோர்களுக்கு அதிக வாடகை மற்றும் செயல்பாட்டு செலவுகளை சமாளிப்பது கடினமாகியுள்ளது. 2021 அக்டோபர் 9-ஆம் தேதி மும்பையின் அந்தேரியில் முதல் 7-Eleven கடை இந்தியாவில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
