மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டால், நிலுவைத் தொகையில் கணிசமான வித்தியாசம் ஏற்படலாம் என கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக Level 7 ஊழியர்களுக்கு சுமார் ரூ.3.32 லட்சம் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 ஜனவரி முதல் அமலாகுமா?
7-வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து 8-வது ஊதியக் குழுவின் திருத்தப்பட்ட ஊதியம் 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், ஆணையத்தின் அறிக்கை தயாரிப்பு, அதனை அரசு ஆய்வு செய்வது மற்றும் இறுதி அறிவிப்பு வெளியிடுவது என அடுத்தடுத்த நடைமுறைகளுக்கு கால அவகாசம் தேவைப்படலாம். 8-வது ஊதியக் குழு தனது அறிக்கையை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எதில் ஊழியர்களுக்கு இழப்பு ஏற்படும்?
புதிய ஊதியக் குழு அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அடிப்படை ஊதியத்திற்கான நிலுவைத் தொகை கணக்கிடப்படலாம். ஆனால் DA, HRA, போக்குவரத்துப்படி போன்ற பல்வேறு படிகளுக்கு அதே முறையில் நிலுவை கிடைக்காது என்பதால் வித்தியாசம் ஏற்படலாம். இதனால் சம்பளத் திருத்தம் எப்போது அமலுக்கு வருகிறது என்பது ஊழியர்களின் மொத்த வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
Level 7 ஊழியர்களுக்கு எவ்வளவு?
Level 7 ஊழியரின் தற்போதைய அடிப்படை ஊதியம் ரூ.44,900 எனக் கொண்டு, 2.1 என்ற உத்தேச பொருத்தக் காரணியை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி புதிய அடிப்படை ஊதியம் சுமார் ரூ.94,290 ஆக இருக்கலாம்.
அறிக்கை அமல்படுத்துவதில் 17, 20 அல்லது 25 மாதங்கள் தாமதமானால், படிகள் தொடர்பான நிலுவையில் ஏற்படும் இழப்பு அதிகரிக்கலாம். 25 மாத தாமதம் ஏற்பட்டால் சுமார் ரூ.3.32 லட்சம் வரை இழப்பு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இவை உத்தேச கணக்கீடுகள் மட்டுமே; 8-வது ஊதியக் குழுவின் இறுதி பரிந்துரைகள் மற்றும் அரசு அறிவிப்புக்குப் பிறகே உண்மையான தொகை தெரியவரும்.
