வர்த்தகப் போரைத் தவிர்க்க சீனா செல்கிறார் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக தலைவர்!

Published On:

| By Minnambalam Desk

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தணிக்கும் நோக்கில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் மாரோஸ் செஃப்கோவிச் வியாழக்கிழமை சீனாவின் பெய்ஜிங் நகருக்குச் செல்கிறார்.

ADVERTISEMENT

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை, இருதரப்பு வர்த்தக உறவில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. 

சீனாவுடன் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை

ADVERTISEMENT

சீனாவிலிருந்து ஐரோப்பாவுக்கான இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவது பிரஸ்ஸல்ஸுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2025-ல் சீனாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 360 பில்லியன் யூரோவாக இருந்தது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலும் அந்தப் பற்றாக்குறை மேலும் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. 

கார்கள் முதல் ரசாயனங்கள் வரை பதற்றம்

ADVERTISEMENT

சீனாவில் இருந்து மின்சார வாகனங்கள், பேட்டரிகள், ரசாயனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால் ஐரோப்பிய உற்பத்தியாளர்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

குறிப்பாக சீன ஹைபிரிட் கார்களின் இறக்குமதிக்கு வரம்பு விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள யோசனை பேச்சுவார்த்தையில் முக்கிய விவகாரமாக இருக்கலாம். 

அரிய கனிமங்களும் பேச்சுவார்த்தையில் முக்கியம்

சீனா அரிய கனிமங்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களின் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அவற்றுக்கான ஏற்றுமதி உரிம நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

சீனாவுடனான பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் கிடைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது. அதேநேரம், சீனாவுக்கு எதிரான புதிய வர்த்தக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பெய்ஜிங் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. 

வர்த்தகப் போர் வருமா?

இந்தச் சந்திப்பில் மிகப்பெரிய ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது என நிபுணர்கள் கருதுகின்றனர். சில குறிப்பிட்ட விவகாரங்களில் உடன்பாடு ஏற்படலாம் என்றாலும், ஒட்டுமொத்த வர்த்தகப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைப்பது சவாலாகவே உள்ளது. 

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share