நெல்லை, கன்னியாகுமாரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
தமிழ்நாடு மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (ஆகஸ்ட் 2) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

அதி கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தில் இருந்து தமிழகத்தின் தென்மேற்கு பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு குழுக்களும், நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு குழுக்களும் விரைந்துள்ளன.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 -50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள், மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 -50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
