மதுரையில் நேற்று (ஜூலை 30) பலத்த காற்று, இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் முழ்கியது.
ஆரப்பாளையம் ரயில்வே சுரங்க பாதை முழுவதுமாக நீரில் நிரம்பியது. அப்போது, அந்த வழியே சென்ற தனியார் பள்ளி பேருந்து ஒன்றும் நீரில் முழ்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் பல இடங்களில் வாகனங்கள் நீரில் முழ்கியுள்ளன.
மதுரை ஆண்டாள்புரம் மேற்கு தெருவில் உள்ள வீட்டில் முருகேசன் மற்றும் அவரது மருமகன் ஜெகதீசன் ஆகிய இருவரும் வீட்டின் மீன் மோட்டார் அருகில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கனமழையால் மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து மதுரை சுப்பரமணியபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் கைபற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மதுரை மாநாகராட்சி 4ஆவது மண்டலத்திற்கு எதிரில் மழையின் காரணமாக மரத்தடியில் நின்று கொண்டிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த குமார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மழையின் காரணமாக நான்கு பேர் உயிரிழந்திருப்பது மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மழையின் போது வீசிய பலத்த காற்றால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. கீழவாசல் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது பழமையான பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதில் நல்வாய்ப்பாக ஆட்டோவில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தி ஆட்டோவை மீட்டனர். இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் வாகன் ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மழையால் மீனாட்சி அம்மன் கோயிலிலும் தண்ணீர் புகுந்தது.
மோனிஷா