நீலகிரியை மிரட்டும் மழை!

தமிழகம்

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக நீலகிரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அம்மாநிலங்களை ஒட்டிய கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும மழை பெய்து வருகிறது. உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் கடந்த 17 நாட்களுக்கு மேலாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கூடலூருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு எற்பட்டு நீலகிரி மற்றும் கோவையில் உள்ள அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், 664.9 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. இம்மாவட்டதிற்கான இயல்பான மழை அளவை விட 125 சதவீதம் கூடுதலாகும். கூடலூர் பகுதியில் மழை காரணமாக இதுவரை 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.  ஊட்டி – கூடலூர் சாலையில் நடுவட்டம் உட்பட 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பெரிதளவில் பாதிக்கப்பட்டது. மாயாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தெப்பக்காடு தரைபாலத்திற்கு மேல் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. மொத்தம் 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி மழை, மண் சரிவு, தரைபாலம் சேதம் ஆகிய காரணங்களால் மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்தார்.

இடைவிடாது மழை பெய்து கொண்டிருப்பதால் மண் அரிப்பு எற்பட்டு மரங்கள் மின் கம்பங்களின் மேல் சாய்ந்ததால் சில மலை கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  இதனை சீரமைக்கும் பணியில் 1000த்திற்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (ஜூலை 15) உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் மழை பாதிப்பை வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். கள ஆய்வுக்கு பிறகு ஒரிரு நாட்களில் சேதமடைந்த மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் சீராகும் என தெரிவித்தனர்.

அனைத்து பகுதிகளிலும் மழை பாதிப்பை கண்காணிக்கவும், பாதிப்பு ஏற்பட்டால் அதனை சீரமைக்கவும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் 80 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

அவலாஞ்சி மற்றும் மேல் பவானியில் 32 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மற்றும் நீலகிரியில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோனிஷா

+1
0
+1
0
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *