எல்லை வீரர்களின் ரத்தத்தில் சாதி உண்டா? ஆணவக் கொலை கவுரவமா?: உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!

Published On:

| By Kavi

ஆணவக் கொலைகள் செய்வது வெட்கக்கேடான செயல் என்றும் சாதி வெறியின் உச்சகட்டம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கவின் காதலியின் தந்தையான எஸ் ஐ சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி, உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஜாமீன கேட்டு எஸ்.ஐ சரவணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, எஸ்.ஐ சரவணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி புகழேந்தி உத்தரவு பிறப்பித்தார்.

ADVERTISEMENT

கோவையில் தங்கி இருந்து தினசரி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

சாதியம் ஒரு சாபக்கேடு

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, ”ஆணவக் கொலை என்பது சாதியத்தின் உச்சகட்ட வெளிப்பாடு. சாதியம் சமூகத்தை பிளவுபடுத்துகிறது. சாதியம் தேசத்திற்கு ஒரு சாபக்கேடு என்று லாலா சிங் vs உத்திரபிரதேச அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ADVERTISEMENT

கவின் கொலை செய்யப்பட்டது ஆணவக் கொலையின் முதல் சம்பவம் அல்ல. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 59 ஆணவக் கொலைகள் பதிவாகியுள்ளன. சாதியம் என்பது மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றி ஒட்டு மொத்த அமைப்பையும் சீரழித்து வருகிறது.

செயற்கையாக உருவாக்கப்பட்ட சாதி

சூரியன் அனைவருக்கும் ஒளி தருகிறது. மழை எல்லோர் மீதும் பொழிகிறது. காற்றை அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம். இயற்கை சாதி பார்ப்பதில்லை. மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சாதி என்னும் தடைகளை தாண்டி இந்த சமூகம் எப்போது வெளியே வருகிறதோ அப்போதுதான் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற நிலையான உண்மையை அது உணரும்.

ஆணவக் கொலையில் எந்தவிதமான பெருமையும் கிடையாது. அது ஒரு வெட்கக்கேடான செயல் என்ற உண்மையை இந்த சமூகம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லை. இந்த சட்டத்தின் கீழ் பதிவாகும் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. எனவே இளைய தலைமுறையினரின் சிந்தனை போக்கை மாற்றுவதற்கு பள்ளி நிலையில் இருந்தே சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.

ராணுவ வீரர்களின் ரத்தத்தில்…

தாய் நாட்டை பாதுகாக்க போர்க்களத்தில் நிற்கும் வீரர்கள் எதிரிகளின் குண்டு வீச்சை எதிர்கொண்டு தாங்கள் உயிரை தியாகம் செய்யும் போது அவர்களது ரத்தத்திலோ அல்லது தேசபக்தியிலோ எந்த ஒரு சாதி அடையாளமும் இருப்பதில்லை.

அவர்களது வாழ்க்கையும் தியாகமும் நமது அரசியலமைப்பின் அடித்தளமாக விளங்கும் ஒற்றுமை மற்றும் சமத்துவ கொள்கைகளை நமக்கு உணர்த்துகின்றன.

நாட்டை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்களே ஒரு பொதுவான நோக்கத்திற்காக இப்படி ஒன்றிணைய முடியும் போது அவர்களது இந்த முன்மாதிரி ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்வேகத்தை அளிக்க வேண்டும்.

சாதிய பாகுபாடுகளை தூக்கி எறிந்து ஒவ்வொரு தனி மனிதனும் மரியாதையுடன் நடத்தப்படும் ஒரு சமூகத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்.

தலைவர்களை கூடவா…

மாபெரும் தலைவர்களான காமராஜர், முத்துராமலிங்க தேவர், வ உ சிதம்பரம் ஆகியோர் கூட தற்போது சாதி அடிப்படையில் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார்கள். மக்களின் இந்த மனநிலை மாற்றப்பட வேண்டும்.

இத்தகைய மாற்றத்தை அரசால் மட்டுமே கொண்டுவர முடியும். இதற்காக அரசு வலுவான முன்னெடுப்பை எடுக்க வேண்டும்.

எனினும் சில அரசியல் கட்சிகள் கூட தங்களின் வாக்கு வங்கியை திரட்டுவதற்காக சாதியை பயன்படுத்தி , எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் மேலும் எண்ணெய்யை ஊற்றுகின்றன.

முன்னாள் நீதிபதி சந்துரு பரிந்துரை என்ன ஆனது?

குறிப்பாக சாதிய மனநிலை தென் மாவட்டங்களில் மிகவும் பரவலாக காணப்படுகிறது. பள்ளி மாணவர்களிடையே வன்முறை சம்பவம் ஏற்பட்ட போது சாதியத்தை ஒழிப்பதற்கும் பள்ளிகளில் சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையையும் அரசிடம் சமர்ப்பித்தது. எனினும் அந்த பரிந்துரைகள் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், போட்டியிடும் வேட்பாளர்களின் சாதியையோ அல்லது மதத்தையோ கணக்கில் கொள்ளாமல் வாக்களிக்கும்படி மக்களை நிச்சயமாக மாற்ற முடியும் என்பதைக் காட்டுகின்றன.

அரசுக்கு முழு பொறுப்பு

உண்மையில், சாதி என்ற காரணியை பெருமளவில் முறியடித்துத்தான் இங்கு ஒரு ஆட்சி அமைந்திருக்கிறது. ஆனால், மக்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்படும் போது மட்டுமே இந்த மாநிலம் “உண்மையான மாற்றத்தை” அடைந்துவிட்டதாக உரிமை கோர முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, மக்களின் மனங்களில் இருந்து சாதியை முற்றிலுமாக ஒழிப்பதற்கான பொறுப்பையும், அதற்கான முன்னெடுப்புகளையும் இந்த அரசு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share