மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வட்டியுடன் தொகையைப் பெறுவதற்கான வழியாக ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் RD திட்டம் பலரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு மாதம் தவணை செலுத்த மறந்துவிட்டால் என்ன ஆகும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
ஒரு தவணை தவறியதற்காக உடனடியாக RD கணக்கு மூடப்படாது. ஆனால் தாமதக் கட்டணம் விதிக்கப்படுவதுடன், தொடர்ந்து பல மாதங்கள் பணம் செலுத்தாமல் இருந்தால் கணக்கின் நிலையும் பாதிக்கப்படலாம்.
வங்கிகளில் என்ன விதி?
வங்கிகளின் RD விதிகள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். உதாரணமாக, SBI-யில் தாமதமான தவணைகளுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்குக் குறைவான RD-க்கு ₹100-க்கு மாதம் ₹1.50 என்றும், அதற்கு மேற்பட்ட காலத்துக்கு ₹100-க்கு ₹2 என்றும் அபராதம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆறு தவணைகள் செலுத்தப்படவில்லை என்றால் SBI RD முன்கூட்டியே முடிக்கப்படலாம்.
போஸ்ட் ஆபீஸ் RD-யில்?
அஞ்சலக RD-யில் நான்கு தவணைகளுக்குள் தவறுகள் இருந்தால், விடுபட்ட தவணைகளை அபராதத்துடன் செலுத்தி கணக்கைத் தொடர முடியும். அதற்கு மேல் தவறுகள் ஏற்பட்டால் கணக்கு முடக்கப்பட்டதாகக் கருதப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் தேவையான தொகையைச் செலுத்தி கணக்கை மீண்டும் செயல்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
வட்டிக்கு என்ன பாதிப்பு?
தவணை தவறும்போது அடுத்தடுத்து செலுத்த வேண்டிய தொகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அந்த மாதத்துக்கான முதலீடு சேராததால் இறுதியில் கிடைக்கும் முதிர்வுத் தொகையும் குறையலாம். எனவே தவறிய தவணையை முடிந்தவரை விரைவாகச் செலுத்துவது முக்கியம்.
மாத தவணை மறந்து போகாமல் இருக்க சம்பளம் வந்தவுடன் தானாக RD-க்கு பணம் செல்லும் வகையில் ஆட்டோ டெபிட் வசதியை அமைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.
