ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், நிரந்தர ஊழியர் மற்றும் கன்சல்டண்ட் ஆகியோரின் சம்பளம், சலுகைகள், வரி உள்ளிட்ட அம்சங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக மாதந்தோறும் கைக்கு வரும் தொகையை மட்டும் வைத்து இரண்டையும் ஒப்பிடுவது முழுமையான கணக்காக இருக்காது.
கன்சல்டண்ட்களுக்கு கையில் அதிக சம்பளமா?
பொதுவாக கன்சல்டண்டாக பணிபுரிபவர்களுக்கு மாதந்தோறும் கைக்கு வரும் தொகை, நிரந்தர ஊழியரின் take-home salary-யை விட அதிகமாகத் தெரியலாம்.
ஆனால் இந்த தொகையுடன் PF, காப்பீடு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு போன்ற நிறுவன சலுகைகள் இணைந்திருக்காது. எனவே, மாத சம்பளத்தை மட்டும் கணக்கில் கொண்டு முடிவு செய்வது சரியாக இருக்காது.
நிரந்தர ஊழியர்களுக்கு என்ன சலுகைகள்?
நிரந்தர பணியாளர்களின் சம்பளத்தில் PF-க்கான பங்களிப்பு பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோல் நிறுவனமும் ஊழியருக்காக PF-ல் தனது பங்களிப்பை செலுத்துகிறது.
இதுதவிர, மருத்துவக் காப்பீடு, போனஸ், ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மகப்பேறு விடுப்பு மற்றும் பெற்றோர் விடுப்பு போன்ற பலன்களும் கிடைக்கலாம்.
கன்சல்டண்ட் வேலையில் இருக்கும் சிக்கல்கள்
கன்சல்டண்ட்களுக்கு பொதுவாக EPF மற்றும் கிராஜுவிட்டி போன்ற நிரந்தர ஊழியர்களுக்கான பலன்கள் கிடையாது. மருத்துவக் காப்பீட்டையும் தனியாக ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கலாம்.
மேலும், விடுப்பு எடுத்த நாட்களுக்கு சம்பளம் கிடைக்காமல் போகலாம். வருமான வரியைப் பொறுத்தவரை, முன்கூட்டிய வரி செலுத்தும் பொறுப்பும் இருக்கலாம்.
வேலை பாதுகாப்பா? சுதந்திரமா?
நிரந்தர வேலை நிலையான வருமானத்தையும் வேலை பாதுகாப்பையும் வழங்கும். இதனால் வீட்டு கடன் போன்ற நீண்டகால நிதி திட்டங்களுக்கு திட்டமிடுவது ஓரளவு எளிதாக இருக்கலாம்.
மறுபுறம், கன்சல்டண்ட் பணியில் அதிக சுதந்திரம் இருக்கலாம். ஒப்பந்த விதிமுறைகளைப் பொறுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.
எனவே வேலை தேர்வு செய்யும்போது கைக்கு வரும் சம்பளத்தை மட்டும் பார்க்காமல், PF, காப்பீடு, விடுப்பு, வரி மற்றும் வேலை நிலைத்தன்மை ஆகியவற்றையும் சேர்த்து கணக்கிடுவது முக்கியம்.
