காப்பீட்டுத் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு தவறாக விற்பனை செய்வதைத் தடுக்க, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI புதிய விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது. இதன்படி, ஒரு பாலிசி தவறாக விற்பனை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டால், அதற்காக வழங்கப்பட்ட கமிஷனை திரும்பப் பெறும் நடைமுறை கொண்டுவரப்படலாம்.
பாலிசி விற்றவர் யார் என்பது பதிவு செய்யப்படும்
புதிய திட்டத்தில் ஒவ்வொரு பாலிசியுடனும் அதை விற்ற ஊழியர் அல்லது முகவரின் அடையாளத்தை இணைக்க IRDAI முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் ஒரு பாலிசி தொடர்பாக தவறான விற்பனை புகார் எழுந்தால், அதற்கு பொறுப்பான விற்பனை நபரை அடையாளம் காண முடியும்.
மேலும், உறுதி செய்யப்பட்ட மிஸ்செல்லிங் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பொதுவெளியில் வெளியிடும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
விற்பனை இலக்கை அடிப்படையாகக் கொண்ட சலுகைகளுக்கு தடை
வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, இன்சூரன்ஸ் விற்பனை எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளுக்கு தடை விதிக்க IRDAI முன்மொழிந்துள்ளது.
வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ற பாலிசியை விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் வகையில், விற்பனை அளவைக் காட்டிலும் பாலிசியின் தரம், தொடர்ச்சி மற்றும் சேவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முறையை கொண்டு வருவது திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
கமிஷன் திரும்பப் பெறும் நடைமுறை
பாலிசி ரத்து செய்யப்பட்டு, அதற்கு பின்னால் மிஸ்செல்லிங் இருப்பது கண்டறியப்பட்டால், வழங்கப்பட்ட அதிகப்படியான கமிஷனை மீட்டெடுக்கும் நடைமுறையை உருவாக்கலாம் என IRDAI தெரிவித்துள்ளது. தொகையைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் வட்டி வசூலிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு என்ன மாற்றம்?
வாடிக்கையாளருக்கு ஏற்றதா என்பதை மதிப்பீடு செய்யும் suitability assessment முறையை கட்டாயப்படுத்தவும் IRDAI திட்டமிட்டுள்ளது. மேலும், கடனுடன் கட்டாயமாக இன்சூரன்ஸ் இணைக்கும் நடைமுறைகளுக்கும் கட்டுப்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் தற்போது ஆலோசனை நிலையில் உள்ளன; பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அக்டோபர் 25, 2026 வரை கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
