சமையல் எண்ணெய் விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கும் வகையில் சன்பிளவர் ஆயிலுக்கான அடிப்படை இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்துள்ள மத்திய அரசு, சோயாபீன் மற்றும் பாமாயிலுக்கான வரியை பாதியாகக் குறைத்துள்ளது.
சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்களின் செலவு அதிகரித்து, உள்நாட்டு சில்லறை விலையிலும் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.

சன்பிளவர் ஆயில்
இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் கச்சா சன்பிளவர் ஆயிலுக்கான அடிப்படை சுங்க வரியை (Basic Customs Duty) 10 சதவிகிதத்திலிருந்து பூஜ்ஜியமாக மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது, இதுவரை விதிக்கப்பட்டு வந்த 10 சதவிகித அடிப்படை சுங்க வரி தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

சோயாபீன், பாமாயில்
கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா பாமாயிலுக்கும் வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு எண்ணெய்களுக்கும் இதுவரை 10 சதவிகிதமாக இருந்த அடிப்படை சுங்க வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
“இந்த வரிக் குறைப்பால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சமையல் எண்ணெய்களின் விலை குறையும். அதன் பலன் பொதுமக்களுக்கும் கிடைக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

MRP-ஐ குறைக்க அறிவுறுத்தல்
மேலும் இறக்குமதிச் செலவு குறைந்துள்ளதற்கு ஏற்ப விநியோகஸ்தர்களுக்கான விலை (Price to Distributors – PTD) மற்றும் அதிகபட்ச சில்லறை விலையை (Maximum Retail Price – MRP) உடனடியாக குறைக்க வேண்டும் என்றும்சமையல் எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் சன்பிளவர் ஆயில் மட்டுமின்றி சோயாபீன் மற்றும் பாமாயில் விலைகளிலும் வரிக் குறைப்பின் தாக்கம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு லிட்டர் எண்ணெயின் விலை எவ்வளவு குறையும் என்ற குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு அறிவிக்கவில்லை.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கும் வரி குறைப்பு
கச்சா எண்ணெய்களுக்கு மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களுக்கான அடிப்படை சுங்க வரியையும் மத்திய அரசு குறைத்துள்ளது.
அதேநேரத்தில் கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களுக்கு இடையே 19.25 சதவிகித இறக்குமதி வரி வித்தியாசம் தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் உற்பத்தித் திறனைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், வெளிநாடுகளில் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் அதிக அளவில் நேரடியாக இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கும் இந்த வரி வித்தியாசம் தொடர்வதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச சமையல் எண்ணெய் சந்தையையும், இந்தியாவில் சில்லறை விலைகளில் ஏற்படும் மாற்றங்களையும் தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாகவும், நுகர்வோர், விவசாயிகள் மற்றும் உள்நாட்டு சமையல் எண்ணெய் தொழில்துறையின் நலன்களைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
