இந்தியாவின் ‘சன்பிளவர் ஆயில்’ சந்தை யாருக்கு? இதுக்கும் ‘யுத்தம்’ நடத்தும் ரஷ்யா-உக்ரைன்!

Published On:

| By Mathi

India- Sunflower Oil- War

டிவியை ஆன் செய்தால் போதும்… இதய ஆரோக்கியம் முதல் குடும்ப ஆரோக்கியம் வரை பல்வேறு அம்சங்களை முன்வைத்து சன்பிளவர் ஆயில் விளம்பரங்கள் நம்மைச் சுற்றி வருகின்றன. ஆனால் இப்போது சன்பிளவர் ஆயிலைச் சுற்றி நடப்பது ஆரோக்கியப் போட்டி அல்ல; இந்தியாவின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் சந்தையில் யார் அதிக இடத்தைப் பிடிப்பது என்ற சர்வதேச வர்த்தகப் போட்டி.

அதிலும் போட்டியாளர்கள் யார் தெரியுமா? நிஜமான போர்க்களத்தில் மோதிக்கொண்டிருக்கும் ரஷ்யாவும் உக்ரைனும்தான்.

போருக்கு முன்பு இந்திய சன்பிளவர் ஆயில் சந்தையில் வலுவான இடத்தில் உக்ரைன் இருந்தது. போர், கருங்கடல் வழித்தடச் சிக்கல்கள், விலை மற்றும் சப்ளை பிரச்சினைகள் அந்த சந்தையின் கணக்கையே மாற்றிவிட்டன. இப்படி கிடைத்த இடைவெளியில் ரஷ்யா வேகமாக முன்னேறியது. இப்போது இழந்த இந்திய சந்தையை திரும்பப் பிடிக்க உக்ரைனும் முயற்சிக்கிறது. இன்னொரு பக்கம் அர்ஜென்டினாவும் போட்டிக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

இந்தப் போட்டி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு ஒரு கணக்கு போதும்.

2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதங்களில் மட்டும் ரஷ்யாவிலிருந்து இந்தியா வாங்கிய சன்பிளவர் ஆயில் 8.59 லட்சம் டன். அதன் மதிப்பு 1.17 பில்லியன் டாலர்.

ADVERTISEMENT

ஆனால் கதையில் இங்கேதான் ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. இந்திய சந்தையைப் பிடிக்க ரஷ்யாவும் உக்ரைனும் போட்டிபோடும் நேரத்தில், இந்தியர்களோ விலை உயர்ந்த சன்பிளவர் ஆயிலை விட்டுவிட்டு சோயாபீன் ஆயில் பக்கம் நகரத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதற்கு காரணம் விலை மட்டுமல்ல; உலக அரசியலும், கடல் வழிப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும்தான்.

ADVERTISEMENT

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 2.5 முதல் 2.6 கோடி டன் சமையல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதில் சன்பிளவர் ஆயிலின் பங்கு மட்டும் 12 முதல் 14 சதவீதம் வரை உள்ளது. அதேநேரத்தில் இந்தியாவின் சன்பிளவர் ஆயில் தேவையை உள்நாட்டு உற்பத்தியால் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாததால், இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதில் ரஷ்யாவும் உக்ரைனும் முக்கிய சப்ளையர்கள்.

குறிப்பாக இந்திய சந்தையில் ரஷ்யாவின் வளர்ச்சி கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. 2025 ஜனவரி முதல் ஜூலை வரை ரஷ்யாவிலிருந்து இந்தியா 7.304 லட்சம் டன் சன்பிளவர் ஆயிலை இறக்குமதி செய்திருந்தது. 2026-ன் இதே 7 மாதங்களில் இது 8.59 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

பண மதிப்பில் பார்த்தால் இன்னும் பெரிய உயர்வு. கடந்த ஆண்டு இதே காலத்தில் 868.8 மில்லியன் டாலராக இருந்த இறக்குமதியின் மதிப்பு, இந்த ஆண்டு 1.17 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதாவது ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாய் 34.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜூலை மாதத்தை மட்டும் தனியாக எடுத்துப் பார்த்தாலும் ரஷ்யாவின் வேகம் தெரிகிறது. 2025 ஜூலையில் 45,100 டன்னாக இருந்த ஏற்றுமதி, 2026 ஜூலையில் 85,600 டன்னாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட இரு மடங்கு.

இந்தியாவை மீண்டும் குறிவைக்கும் உக்ரைன்

ரஷ்யா இப்படி இந்திய சந்தையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்க, மறுபக்கம் உக்ரைனும் தனது பழைய சந்தையை மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கிறது. Sunvin Group தலைமை செயல் அதிகாரி சந்தீப் பஜோரியா தெரிவித்துள்ள தகவலின்படி, உக்ரைன் சன்பிளவர் ஆயிலின் தரத்தில் இந்திய இறக்குமதியாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உக்ரைனில் உற்பத்தியும் சப்ளையும் அதிகரித்தால், கூடுதல் அளவில் வாங்கவும் இந்திய நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

அப்படியானால் உக்ரைனுக்கு என்ன பிரச்சினை?

உக்ரைன் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய சந்தையில் தற்போது நல்ல விலை கிடைக்கிறது. இதனால் இந்தியாவுக்கு விற்பனை செய்வதைவிட ஐரோப்பிய சந்தைக்கு அனுப்புவது அவர்களுக்கு லாபகரமாக உள்ளது.

அதுமட்டுமல்ல. ரஷ்யா–உக்ரைன் போர் நீடித்த காலத்தில் சன்பிளவர் ஆயிலுக்காக உக்ரைனை மட்டும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் இந்திய இறக்குமதியாளர்கள் மாற்று சப்ளையர்களைத் தேடிவிட்டனர். அதில் பலன் பெற்ற நாடுகளில் ஒன்று அர்ஜென்டினா.

இதனால் இந்திய சந்தையை மீண்டும் பிடிக்க நினைக்கும் உக்ரைனுக்கு இப்போது ரஷ்யாவுடன் மட்டுமல்ல, அர்ஜென்டினாவுடனும் போட்டிபோட வேண்டியிருக்கிறது. இந்தப் போட்டியில் வெல்ல விலை குறைவாக இருக்க வேண்டும்; அதேநேரத்தில் சப்ளையும் தடையில்லாமல் இருக்க வேண்டும்.

ஆகஸ்டில் அதிரடி திருப்பம்

ரஷ்யா, உக்ரைன், அர்ஜென்டினா என இந்திய சந்தைக்காக போட்டிபோட்டுக் கொண்டிருக்கும்போதுதான் ஆகஸ்ட் மாத இறக்குமதி கணக்கில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டது.

இந்தியாவின் மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி ஆகஸ்டில் 15.7 லட்சம் டன்னாக உயர்ந்தது. ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது இது 1.5 சதவீதம் அதிகம்.

பண்டிகை காலம் நெருங்குவதால் எண்ணெய் நிறுவனங்கள் கையிருப்பை அதிகரித்ததும் இதற்கு ஒரு காரணம். ஆனால் இந்த அதிகரிப்பில் சன்பிளவர் ஆயிலுக்கு இடமில்லாமல் போனதுதான் துயரம்.

ஆகஸ்டில் சோயாபீன் ஆயில் இறக்குமதி 26 சதவீதம் உயர்ந்து சாதனை அளவான 6.2874 லட்சம் டன்னை எட்டியது. பாமாயில் இறக்குமதியும் 7 சதவீதம் உயர்ந்து 7.8276 லட்சம் டன்னாக அதிகரித்தது.

அதே ஆகஸ்டில் சன்பிளவர் ஆயில் இறக்குமதி மட்டும் 36 சதவீதம் சரிந்து 1.6064 லட்சம் டன்னாகக் குறைந்தது.

கருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்ட சப்ளை சிக்கலால் சன்பிளவர் ஆயில் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்சினை இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

சன்பிளவர் ஆயில் கிடைக்கவில்லை என்றால் சமையலை நிறுத்த முடியுமா?

அதனால் இந்திய நிறுவனங்கள் உடனடியாக அடுத்த ஆப்ஷனை நோக்கித் திரும்பியிருக்கின்றன. அதன் பெரிய பயனாளியாக மாறியிருப்பது சோயாபீன் ஆயில்.

ரூ.150 ஆயில்… ரூ.175 ஆனது எப்படி?

சன்பிளவர் ஆயிலுக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு சிக்கல் விலை.

CRISIL Ratings ஆய்வின்படி, கடந்த 12 மாதங்களின் சராசரியில் ஒரு டன் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி விலை 1,275 டாலராக இருந்தது. தற்போது அது 1,420 முதல் 1,440 டாலர் வரை உயர்ந்துள்ளது.

இதன் தாக்கம் நமது சமையலறை வரை வந்துவிட்டது.

CRISIL Ratings ஆய்வின்படி, ரீபைண்ட் சன்பிளவர் ஆயில் சில்லறை விலை 2026 ஜனவரியில் லிட்டருக்கு சுமார் ரூ.150 என்ற நிலையிலிருந்து ஏப்ரலில் ரூ.170–175 வரை உயர்ந்திருந்தது. அதன்பிறகும் விலை உயர்ந்த நிலையிலேயே உள்ளது. உதாரணமாக, ஆகஸ்ட் 22-ஆம் தேதி பேக்கிங் செய்யப்பட்ட ஒரு லிட்டர் Gold Winner சன்பிளவர் ஆயில் பாக்கெட்டின் MRP ரூ.213 என குறிப்பிடப்பட்டுள்ளது. சில்லறை சந்தையில் தள்ளுபடியைப் பொறுத்து இதைவிட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில் சோயாபீன் மற்றும் ரைஸ் பிரான் ஆயில் ஆகியவை சன்பிளவர் ஆயிலைவிட லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ. 20 வரை மலிவாகக் கிடைக்கின்றன.

இதனால் குடும்ப பட்ஜெட்டை பார்த்து எண்ணெய் வாங்குபவர்களில் ஒரு பகுதியினர் சன்பிளவர் ஆயிலுக்கு பதிலாக மலிவான எண்ணெய்களைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக CRISIL கணித்துள்ளது.

இதன் காரணமாகவே நடப்பு 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ரீபைண்ட் சன்பிளவர் ஆயில் பயன்பாட்டு அளவு சுமார் 10 சதவீதம் குறையலாம் என்றும் CRISIL மதிப்பிட்டுள்ளது.

ஆக, இந்தியாவின் சன்பிளவர் ஆயில் சந்தையில் ஒரு வித்தியாசமான ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்திய சந்தையில் தனது பிடியை அதிகரிக்கிறது ரஷ்யா. இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க முயல்கிறது உக்ரைன். கிடைத்த வாய்ப்பில் உள்ளே நுழைந்து போட்டி போடுகிறது அர்ஜென்டினா.

ஆனால் இவர்களுக்கெல்லாம் பெரிய சவாலை ஏற்படுத்துவது இந்திய நுகர்வோர்தான்.

இந்திய நுகர்வோர் சன்பிளவர் ஆயிலைவிட விலை குறைந்த சோயாபீன், ரைஸ் பிரான் ஆயில்களுக்கு மாறத் தொடங்கினால், இந்திய சந்தையைப் பிடிக்க ரஷ்யாவும் உக்ரைனும் நடத்தும் போட்டி இன்னும் கடினமாகும். இறுதியில் எந்த நாட்டின் சன்பிளவர் ஆயில் குறைந்த விலையிலும் தடையில்லாமலும் இந்தியாவுக்கு கிடைக்கிறதோ, அந்த நாட்டுக்கே சந்தையில் அதிக வாய்ப்பு கிடைக்கும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share