ரூ.2,000-க்கு மேல் UPI பணம்… வியாபாரிகள் GST கட்ட வேண்டுமா? உண்மை என்ன?

Published On:

| By Mathi

UPI-GST

ரூ.2,000-க்கு மேல் UPI மூலம் பணம் செலுத்தினால், அதற்காக வியாபாரிகள் GST செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக UPI பரிவர்த்தனைகளுக்கான MDR கட்டணம் மற்றும் அதன் மீதான GST தொடர்பாக வெளியாகும் தகவல்கள் வியாபாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளில் உண்மையில் யாருக்கு MDR பொருந்தும், GST எதன் மீது விதிக்கப்படும், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்களா என்பது குறித்து UPI பணப் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் National Payments Corporation of India (NPCI) விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

NPCI விளக்க அறிக்கை: UPI-யில் வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் Merchant Discount Rate (MDR) மீதான GST, சிறு வியாபாரிகளுக்கு சுமையை ஏற்படுத்தும் என்றும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை அதிக செலவுடையதாக மாற்றும் என்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவறானது என்று தெரிவித்துள்ளது.

ரூ.2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வியாபார UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவிகித MDR கட்டணம் விதிக்கப்படுகிறது. ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு தொடர்ந்து MDR பூஜ்ஜியமாகவே இருக்கும். எனவே, அந்தப் பரிவர்த்தனைகளில் MDR மீதான GST தாக்கமும் இருக்காது.

ADVERTISEMENT

அரசின் தரவுகளின்படி, UPI மூலம் வியாபாரிகளுக்கு மேற்கொள்ளப்படும் மொத்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில், ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகள் 96 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளன. இதனால் பெரும்பாலான UPI பரிவர்த்தனைகளுக்கு MDR விதிக்கப்படாது. எனவே MDR மீதான GST-யும் அவற்றுக்குப் பொருந்தாது.

மேலும், ஒரு வியாபாரி MDR மீது செலுத்தும் GST தொகையை, பொருட்கள் அல்லது சேவைகளின் விற்பனைக்காக அவர் செலுத்த வேண்டிய GST தொகையிலிருந்து சரிசெய்துகொள்ள முடியும். இதனால் MDR மீது செலுத்தப்படும் GST தொகை வியாபாரிகளுக்கு கூடுதல் வரிச்சுமையாக இருக்காது.

ADVERTISEMENT

அதேபோல், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை UPI மூலம் பணம் பெறும் சிறு வியாபாரிகள் MDR செலுத்த வேண்டியதில்லை. எனவே அவர்களுக்கு MDR மீதான GST என்ற பிரச்சினையே எழாது.

இதனால் MDR மீதான GST வியாபாரிகளுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்ற அச்சம் தவறானது என்றும், பெரும்பாலான UPI பரிவர்த்தனைகளும் சிறு வியாபாரிகளும் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு NPCI தெரிவித்துள்ளது.

அதாவது, ரூ.2,000-க்கு மேல் UPI மூலம் பணம் செலுத்தியவுடன் அந்த முழுத் தொகைக்கும் GST விதிக்கப்படும் என்பது கிடையாது. ரூ.2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வியாபார UPI பரிவர்த்தனைகளில் விதிக்கப்படும் MDR கட்டணத்தின் மீதுதான் GST கணக்கிடப்படும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share