இந்தியாவின் 2026-27 நிதியாண்டுக்கான உண்மையான GDP வளர்ச்சி கணிப்பை 6.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக S&P Global Ratings உயர்த்தியுள்ளது. ஜூன் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட வலுவாக இருந்த பொருளாதார செயல்பாடுகளே இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.
தொழில், நுகர்வு வளர்ச்சி கை கொடுத்தது
தொழில்துறை உற்பத்தி, உள்நாட்டு நுகர்வு, பொருட்கள் ஏற்றுமதி மற்றும் அரசு முதலீடுகள் ஆகியவை ஜூன் காலாண்டு வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்ததாக S&P தெரிவித்துள்ளது. குறிப்பாக உள்நாட்டு தேவை தொடர்ந்து வலுவாக இருப்பது இந்திய பொருளாதாரத்தின் முக்கிய ஆதரவாக பார்க்கப்படுகிறது.
2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவானது. இதன் தொடர்ச்சியாகவே முந்தைய கணிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் பாதியில் வேகம் குறைய வாய்ப்பு
அதே நேரத்தில், நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார வளர்ச்சி சற்றுக் குறையலாம் என S&P கணித்துள்ளது. GST மாற்றங்கள் மற்றும் வருமான வரிக் குறைப்புகளால் கிடைத்த ஊக்கம் படிப்படியாக குறையலாம் என்பதே இதற்கான காரணமாக கூறப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 9 வரை பதிவான மழைப்பொழிவு இயல்பை விட 15 சதவீதம் குறைவாக இருந்ததாக S&P குறிப்பிட்டுள்ளது. இதனால் வேளாண் உற்பத்தி மற்றும் உணவுப் பணவீக்கம் அடுத்த மாதங்களில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாக உள்ளன.
RBI வட்டி உயர்த்துமா?
வளர்ச்சி உயர்ந்தாலும் பணவீக்க அழுத்தங்கள் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி FY27-ல் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தக்கூடும் என S&P எதிர்பார்க்கிறது. நடப்பு நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் சராசரியாக 5.1 சதவீதமாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் கணித்துள்ளது.
