UPI மூலம் ரூ.2,000-க்கு மேல் பணம் செலுத்தினால் 0.4 சதவிகித MDR கட்டணம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு, வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அக்டோபர் 15 முதல் குறிப்பிட்ட வணிகர்களுக்கு செலுத்தப்படும் ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவிகித MDR (Merchant Discount Rate) நடைமுறைக்கு வருகிறது. ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்த MDR கிடையாது. மேலும், இந்த MDR வாடிக்கையாளருக்கான கட்டணம் அல்ல; வணிகரிடம் வசூலிக்கப்படும் கட்டணம் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், MDR என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்கப்படுமா என்ற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி:
- UPI குறித்து எதிர்க்கட்சிகள் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் இதில் எந்தக் குழப்பமும் இருக்கக்கூடாது என்பதற்காக இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
- UPI-ல் ரூ.2,000-க்கு மேல் பணம் செலுத்தும்போது 0.4% MDR கட்டணம் என அறிவிக்கப்பட்டிருப்பது வரி அல்ல; செஸ் அல்ல. அரசால் விதிக்கப்படும் கூடுதல் கட்டணமும் அல்ல. இதன் மூலம் வசூலிக்கப்படும் பணம் அரசின் கஜானாவுக்கோ, கருவூலத்துக்கோ செல்லாது.
- POS இயந்திரங்களை வழங்கும் வங்கிகள், QR சேவை வழங்குபவர்கள், பணத்தைப் பெறும் வங்கிகள் உள்ளிட்ட இந்தப் பரிவர்த்தனையில் தொடர்புடைய தரப்பினர் பரஸ்பரம் எடுத்த முடிவுதான் இது.
- ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் 0.4 சதவிகித MDR மூலம் கிடைக்கும் தொகை UPI பரிவர்த்தனையில் தொடர்புடைய நான்கு தரப்பினரிடையே மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும்.
- வணிகர்கள் Visa, Debit Card, Credit Card உள்ளிட்ட பல்வேறு கார்டுகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அவற்றிலும் MDR இருக்கிறது. ஆனால் அந்த MDR கட்டணத்தை வாடிக்கையாளரிடம் வசூலிப்பதில்லை.
- நீங்கள் ரூ.5,000 மதிப்புள்ள பொருளை வாங்குகிறீர்கள் என்றால், பில்லில் ரூ.5,000 மற்றும் அதற்கான GST இருக்கும். ஆனால் MDR கட்டணத்தை அதனுடன் சேர்த்து வாடிக்கையாளரிடம் வசூலிப்பதில்லை.
- அதேபோல UPI பரிவர்த்தனையிலும் இந்த MDR செலவு வாடிக்கையாளரிடம் மாற்றப்படாது.
- வணிகர்களும் வங்கிகளும் தங்களுக்குள் இந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறார்கள். இதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை.
- மற்ற கார்டுகளில் இந்தச் செலவை வாடிக்கையாளரிடம் வசூலிக்காதபோது, UPI-ல் மட்டும் ஏன் வாடிக்கையாளரிடம் வசூலிக்கப் போகிறார்கள்?
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
