டிஜிட்டல் ரூபாயை அன்றாடப் பணப்பரிவர்த்தனைகளில் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் HDFC வங்கி ஐந்து புதிய பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகள் முதல் விமானப் பயணத்தில் இணைய இணைப்பு இல்லாமல் பணம் செலுத்துவது வரை பல்வேறு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
விமானத்திலும் இணையம் இல்லாமல் பணம் செலுத்தலாம்
விமானப் பயணத்தின்போது இணைய இணைப்பு இல்லாத சூழலிலும் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. Tap and Pay அல்லது ஆதரிக்கப்படும் QR முறைகள் மூலம் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு பணம் செலுத்த முடியும்.
கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளுக்கு புதிய பயன்பாடு
HDFC வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் ரிவார்டு புள்ளிகளை டிஜிட்டல் ரூபாயாக மாற்றி பயன்படுத்த முடியும். உணவு, எரிபொருள், ஷாப்பிங் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இந்தத் தொகையை செலவிடலாம்.
ஊழியர்களுக்கு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கான அலவன்ஸ்
நிறுவனங்கள் ஊழியர்களுக்கு உணவு, எரிபொருள் அல்லது பயணச் செலவுகளுக்காக டிஜிட்டல் ரூபாயில் அலவன்ஸ் வழங்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பணம் எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டதோ, அதற்கேற்ப மட்டுமே பயன்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை அமைக்க முடியும்.
கிஃப்ட் வவுச்சர் மற்றும் BHIM இணைப்பு
வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் ரூபாய் கிஃப்ட் வவுச்சர்களை வழங்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மெசேஜ் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிர முடியும். மேலும் HDFC-யின் டிஜிட்டல் ரூபாய் வாலட் BHIM உடன் இணைக்கப்பட்டுள்ளதால், வழக்கமான UPI QR குறியீடுகளையும் பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி கிடைக்கிறது.
