பாமகவில் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு பொறுப்பு வழங்கியுள்ளார் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ்.
பாமக தற்போது ராமதாஸ் அணி, அண்புமணி அணி என இரண்டு அணியாக உள்ளது. இரு தரப்பும் மாறி மாறி மாவட்ட செயலாளர்களை நியமிப்பது, நிர்வாகிகளை நீக்குவது, பொதுக்குழு நடத்துவது என தனி தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இருவருக்கும் இடையேயான் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தவர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி.
அன்புமணி பிரிந்து சென்றதை தொடர்ந்து ஸ்ரீகாந்திக்கு ராமதாஸ் முக்கியத்துவம் கொடுத்துவந்தார்.
கடந்த மாதம் ராமதாஸ் தலைமையில் நடந்து செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்தியை மேடையேற்றினார் ராமதாஸ். பூம்புகார் வன்னியர் சங்க மகளிர் பெருவிழாவில், காந்திதான் முதல் தீர்மானத்தையே வாசித்தார்.
கடந்த 17ஆம் தேதி நடந்த பொதுக்குழுவிலும் மேடையில் அமரவைக்கப்பட்டார் ஸ்ரீகாந்தி.
இப்படி கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து வந்த ராமதாஸ், பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினராக மூத்த மகள் ஸ்ரீகாந்தியை நியமித்திருக்கிறார். ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவிலேயே இம்முடிவை எடுத்து அறிவித்திருக்கிறார் என்கிறார்கள் பாமக வட்டாரத்தில்.
22 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில் ஸ்ரீகாந்திக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
“முன்னதாக என் குடும்ப பெண்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று மருமகள் சவுமியாவிடம் சொன்னேன். ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும்.
குடும்ப பெண்கள் கட்சியில் வேண்டாம் என்று சொன்னேன். என்னிடம் கெஞ்சி, கூத்தாடி, தருமபுரியில் போட்டியிட்டார் சவுமியா” என்று செய்தியாளர்களிடம் ராமதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
