இளைஞர்களை ஈர்க்க பொதுத்துறை வங்கிகள் தங்களது அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
வங்கிகள் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் சேவைகளை எளிமைப்படுத்துவதுடன், அவர்களின் எதிர்பார்ப்புகளை நேரடியாகக் கேட்டறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘கூல்’ ஆக வேண்டும் அரசு வங்கிகள்
பொதுத்துறை வங்கிகள் இன்னும் பழைய பாணியிலான நிறுவனங்கள் என்ற எண்ணம் இளம் தலைமுறையினரிடம் இருப்பதை மாற்ற வேண்டும் என்று சீதாராமன் கூறியுள்ளார். தனியார் வங்கிகள் இளைஞர்களிடம் ‘கூல்’ என்ற வரவேற்பைப் பெறுவதற்கான காரணங்களை அரசு வங்கிகள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வங்கிச் சேவைகள் எளிமையாகவும், தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்பவும், 24 மணி நேரமும் கிடைக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதும் அவரது அறிவுறுத்தல்களில் இடம்பெற்றுள்ளது.
இலவச ஆன்லைன் படிப்புகள், வவுச்சர்கள்
இளைஞர்களுடன் வங்கிகள் தொடர்பை ஏற்படுத்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டையும் பயன்படுத்தலாம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். பிரபல கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் கல்வி தளங்களுடன் இணைந்து இலவச படிப்புகளை வழங்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதனுடன் உடற்பயிற்சி மையங்கள், யோகா மையங்கள் மற்றும் நம்பகமான மனநல நலத்திட்ட தளங்களுக்கான கூப்பன்கள் அல்லது வவுச்சர்களையும் வங்கிச் சேவைகளுடன் இணைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 2 முதல் ‘Banking for Youth’
16 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டு அக்டோபர் 2 முதல் ஒரு மாத கால ‘Banking for Youth’ பிரசாரத்தை நடத்த பொதுத்துறை வங்கிகள் பரிசீலிக்க வேண்டும் என சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்களுக்கே வங்கிகள் நேரடியாகச் சென்று கணக்கு தொடங்குதல், நிதி விழிப்புணர்வு மற்றும் கடன் மதிப்பெண் குறித்த தகவல்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கிளைகளில் இளைஞர்களுக்காக ‘Yuva Kiosk’ அல்லது ‘Yuva Banking Mitra’ போன்ற பிரத்யேக வசதிகளையும் உருவாக்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.
