’துடரும்’ படத்தின் மாபெரும் வெற்றியால் மலையாளத் திரையுலகில் நட்சத்திர இயக்குனராக உருவெடுத்திருப்பவர் தருண் மூர்த்தி. இவர் இயக்கிய ‘ஆபரேஷன் ஜாவா’, ‘சௌதி வெல்லக்கா’ ஆகியனவும் வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்தைத் தந்த கமர்ஷியல் படங்களாகவே இருந்தன. அதனால், இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.
‘துடரும்’ படத்திற்குப் பிறகு, அப்படத்தில் சப் இன்ஸ்பெக்டராக நடித்த பினு பாப்புவின் எழுத்தாக்கத்தில் ‘டொர்படோ’ (Torpedo) எனும் படத்தை இயக்குகிறார். இதில் பகத் பாசில், நஸ்லென் கஃபூர், கணபதி உடன் நம்மூர் அர்ஜுன் தாஸும் நடிக்கிறார். ‘த்ரில்லர் ட்ராமா’ வகைமையில் அமைந்த இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.
சமீபகாலமாக மலையாளத் திரையுலகில் ரசிகர்களின் கவனம் ஈர்த்துவரும் நடிப்புக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தைத் தொடர்ந்து, தனது முதல் படமான ‘ஆபரேஷன் ஜாவா’வின் அடுத்த பாகமாக ‘ஆபரேஷன் கம்போடியா’ படம் உருவாவதாக அறிவித்திருக்கிறார் இயக்குனர் தருண் மூர்த்தி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரையும் பகிர்ந்திருக்கிறார்.
முதல் பாகத்தில் நடித்த லுக்மென் ஆவரன், பாலு வர்கீஸ், பினு பாப்பு, பிரசாந்த் அலெக்சாண்டர் ஆகியோருடன் இதில் பிருத்விராஜும் கைகோர்க்கிறார். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார்.
சைபர் கிரைம் சார்ந்து காவல் துறை மேற்கொள்ளும் விசாரணைகளில், சாதாரண பின்னணி கொண்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் இரண்டு பேர் பங்கேற்று துப்பு துலக்குவதே ‘ஆபரேஷன் ஜாவா’வின் கதையாக இருந்தது.
கம்போடியா பின்னணியில் நிகழ்கிற ‘சைபர் குற்றம்’ ஒன்றைத் தொடர்புபடுத்தி அடுத்த பாகம் உருவாவதால், இப்படத்தின் பட்ஜெட்டும் காட்சியாக்கமும் ரொம்பவே பெரியதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
