பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டைச் சிறையில், ஏர்வாடி அருகே உள்ள கோதைச்சேரியைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவர் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ளார். இவர், நேற்று காலை பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் இருந்து சிறைக் காவலர்களுக்குத் தெரியாமல் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து, தகவலறிந்த காவல்துறை விரைவாகச் செயல்பட்டு கைதி சுடலைமுத்துவை இன்று அதிகாலையில் கைதுசெய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, காவல்துறை துணைத் தலைவர் கனகராஜ், பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலிருந்து கைதி தப்பி ஓடியது குறித்தும், சிறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், கைதி தப்பி ஓடியதற்கு பணியில் இருந்த காவலர்களின் கவனக்குறைவே காரணம் என்று, சிறைக் காவலர்கள் திருமலை நம்பி, ஆதித்யா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
