தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் கார்த்திக் இன்று (அக்டோபர் 9) வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தாம்பரம் மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வரும் கூடுதல் டிஜிபி பிரேம் ஆனந்த் சின்ஹா, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை பெருநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வரும் கூடுதல் டிஜிபி அமல்ராஜ், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பொறுப்பையும் முழு கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த மே மாதம் பதவியேற்றது. இதையடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
2 மாதங்களில் மாற்றப்பட்ட அருண்
சென்னை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றிய அருண், மே 25-ந் தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட 50 நாட்களில், ஜூலை 13-ந் தேதி அந்தப் பதவியிலிருந்து அருண் மாற்றப்பட்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பு மகேஸ்வரியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், ஊழல் புகார்களை விசாரிக்கும் முக்கியமான துறைக்கு முழுநேர இயக்குநர் நியமிக்கப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் பின்னணியில் லஞ்ச ஒழிப்புத் துறை புதிய இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
