பொள்ளாச்சி நீர்வளத் துறையில் 22 டெண்டர்கள் ரத்து

Published On:

| By Pandeeswari Gurusamy

பொள்ளாச்சி நீர்வள துறையின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்த 22 டெண்டர்களைத் தமிழ்நாடு அரசு திடீரென ரத்து செய்துள்ளது.

கோவை பகுதி பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன வட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி ஆழியாறு வடிநிலக் கோட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருந்த டெண்டர்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டன. இதில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமலும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கண்டறியப்பட்ட மொத்தம் 22 டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

திறந்தவெளி டெண்டராக (Open Tender) அறிவிக்கப்படாமல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமேயான வரையறுக்கப்பட்ட டெண்டராக (Limited Tender) இது அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மேலும், சான்றிதழ் வாங்க ஒப்பந்ததாரர்கள் நேரில் வர வேண்டும் என அந்த டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. விதியை மீறி நேரில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதற்கு அறப்போர் இயக்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி நீர்வளத் துறையில் அறிவிக்கப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது சமூக வலைதளப் பதிவில், “பொள்ளாச்சியில் 28 டெண்டர்களுக்கு விண்ணப்பிக்கும் ஒப்பந்ததாரர்களை நேரில் வரவழைக்கும் வகையில் கொடுக்கப்பட்டிருந்த கண்டிஷன் அறப்போர் புகாரை அடுத்து நீக்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்குப் பாராட்டுகள்.

டெண்டர் விண்ணப்பிக்கும் ஒப்பந்ததாரர்களை நேரில் வரவழைக்கும் திமுக, அதிமுக ஆட்சிக் காலத்து செட்டிங் டெக்னிக்குக்கு நிரந்தர முடிவு கட்டுங்கள். மேலும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் வகையில் போடப்படும் லிமிடெட் டெண்டர்களை ஓபன் டெண்டர்களாக மாற்றி போட்டியைப் பரவலாக்குங்கள். இதன் மூலம் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் அதிக விலைக்கு டெண்டர் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவது தடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share