படகுகளில் கருப்புக்கொடி! பட்டினப்பாக்கத்தில் கொந்தளிக்கும் மீனவர்கள்.. விஜய் அரசுக்கு எழுந்த புதிய சிக்கல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் மீனவர்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க 9 மீனவ கிராமங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இன்று மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களது படகுகளில் கருப்புக்கொடிகளைக் கட்டி தவெக அரசின் முயற்சிக்குத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

மீனவ மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும்; புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் எங்களது பூர்வீக குடியிருப்பு உரிமைகள் பறிபோகும்” என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் பேசுகையில், ‘புதிய அரசு வந்துள்ளது; அவர்கள் நமக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்தோம். த.வெ.க. அரசு சார்பில் போட்டியிட்ட வெங்கடராமன் தற்போது அமைச்சராக உள்ளார்.

ADVERTISEMENT

அவர் முன்பு ஒரு முறை விவாத மேடையில் பேசும்போது, ‘மீனவர்கள் எந்த இடத்தைக் கேட்கிறார்களோ, அது அவர்களுக்குச் சொந்தமான இடம்; அதைக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். தேர்தல் முடிந்து அவர் ஜெயித்த பிறகு, ‘நமக்காகப் பேசியவர் அமைச்சராகிவிட்டாரே’ என்ற சந்தோஷத்தில் அவரிடம் சென்றோம். ஆனால், அவரிடமிருந்த பேச்சுவார்த்தையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ‘இது எனது துறை கிடையாது; நீங்கள் என்னை நம்பி ஓட்டு போடவில்லை, முதலமைச்சரை நம்பித்தான் ஓட்டு போட்டீர்கள். அதனால் எனக்கு இதுபற்றித் தெரியாது’ என்று கூறி கைக்கழுவிவிட்டார்.

நாங்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்; நமது இளைஞர்கள் சிறைக்கும் சென்றார்கள். பட்டினப்பாக்கத்தில் இருந்து நொச்சிக்குப்பம் வரை உள்ள ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இணைந்து தினமும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அரசாங்கம் ஓர் அரசாணையை வெளியிடுகிறது. அந்த இடத்தில் புதிய சட்டமன்றம் கட்டப்படவுள்ளதாக அறிவிக்கிறது.

அப்பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம்; பல்வேறு பள்ளிகள் இயங்கும் இடம்; போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி; முக்கியமாக, மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ள இடம். மீனவர்கள் சுயமாக உழைத்துச் சம்பாதிக்கிறார்கள். ஒரு மீன்கடை இருந்தால், அதை நம்பி பத்து குடும்பங்கள் பிழைக்கின்றன. அப்படிப்பட்ட மக்களுக்கு அரசு ஊக்கமளித்து வழிகாட்டாமல், நமது தொழிலை நசுக்குவது போலவும், நம் மீது கல்லைத் தூக்கிப் போட்டு நம்மைப் புதைத்துவிட்டு அதன் மேல் சட்டமன்றத்தைக் கட்டுவது போலவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மிகவும் வேதனையாக உள்ளது.

இருப்பினும், இந்தப் போராட்டத்தில் திரண்டிருந்த மக்களைப் பார்க்கும்போது, எங்களது ஊர் மீண்டும் கைக்குக் கிடைத்தது போன்ற சந்தோஷம் ஏற்படுகிறது’ என்று தெரிவித்தனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share