SIR விவகாரத்தில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகதான் முழு பொறுப்பேற்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மூலமாக 13 கோடியே 30 லட்சம் மக்களின் அடிப்படை வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு தி.மு.க-வே முழுப் பொறுப்பு. தி.மு.க நிர்வாகிகள்தான் வாக்குச்சாவடிகளுக்கு சென்று இந்த திரு த்தப் பணிகளில் உடனிருந்து பெயர்களை நீக்க உதவினார்கள். அதனால்தான், அவர்கள் தொடக்கத்தில் எஸ்.ஐ.ஆர். முறைக்கு எதிராக மௌனம் காத்தனர்.இந்த ஜனநாயக படுகொலைக்கு தி.மு.க-வையே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். தற்போது நாடு முழுவதும் அதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, திமுகவும் குரல் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு விவகாரம், ரூ.4,000 கோடி மழைநீர் வடிகால் திட்ட முறைகேடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து கூட்டணி தர்மம் காரணமாக நான் பொதுவெளியில் குரல் கொடுக்காமல் இருந்தேன். அதே நேரத்தில், அவர்களுக்குள் எனது எதிர்ப்பைப் பதிவு செய்துதான் வந்தேன்” என்றார்.
“தற்போதைய ஆட்சியில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு பொதுவெளியில் குரல் கொடுப்பதில்லையா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “எப்போதும் ஒரே போல் தான் வைகோ இருப்பான். தற்போதைய ஆட்சியில் பொதுப்பணித்துறை, பத்திரப்பதிவுத் துறை உள்ளிட்ட எதிலும் கமிஷன் கிடையாது; ஊழல் குறைந்துள்ளது. ஊழலை முற்றிலும் ஒழிப்பது என்பது இமாலய சாதனை போன்றது; அதை அரசு செய்து வருகிறது. 4 மாத கால ஆட்சியில் அவ்வளவுதான் செய்ய இயலும். கடந்த ஆட்சிக் காலங்களில் கமிஷன் வாங்கிப் பழகிய அதிகாரிகள், தற்போது கமிஷன் வாங்க முடியாமல் தவெக அரசைச் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்” என்றார்.
அப்போது, “தலைமைத் தேர்தல் ஆணையம்தான் தன்னிச்சையாக வாக்காளர்களை நீக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது சரியா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த வைகோ, “திமுகவினர்தான் எஸ்.ஐ.ஆர். பணியின்போது முழுமையாக ஈடுபட்டார்கள். அவர்களின் விருப்பப்படிதான் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் திமுகதான் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறினார். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து ஜனநாயகப் படுகொலை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
