Vijay Govt. drops DMK Govt Projects: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் கைவிடப்படுவதும் மறு ஆய்வுக்கு உட்படுவதும் தொடருகிறது.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து
சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கும் திட்டத்தை முந்தைய திமுக அரசு முன்னெடுத்தது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
தவெக தொடங்கப்பட்ட பிறகு விஜய் நடத்திய முதல் மக்கள் போராட்டமும் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரானதாக அமைந்தது. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளையும் நீர்நிலைகளையும் பாதிக்கும் வகையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கப் போவதில்லை என்று விஜய் அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில் சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைக்கும் திட்டம் முழுமையாகக் கைவிடப்படவில்லை. விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத மாற்று இடத்தை அரசு தேடி வருகிறது.
கோயில் நிதியில் 46 திட்டங்கள் ரத்து
முந்தைய திமுக ஆட்சியில் கோயில் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட 46 கட்டுமானத் திட்டங்களின் நிர்வாக அனுமதியை முதல்வர் விஜய் அரசு ரத்து செய்துள்ளது.
இதன்படி, ரூ.115.77 கோடி மதிப்பிலான 29 திருமண மண்டபங்கள் மற்றும் ரூ.130.08 கோடி மதிப்பிலான 17 வணிக வளாகங்கள் என மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பிலான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்றத் தடைகள் மற்றும் கோயில்களுக்கு ஏற்படும் நிதிச்சுமை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு நிர்வாக அனுமதிகள் திரும்பப் பெறப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. கோயில் நிதி இனி கோயில்களின் பராமரிப்பு, பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் புதிய நகரத் திட்டம் கைவிடப்பட்டது
காஞ்சிபுரம் நகரத்தின் திட்டமிடப்படாத வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், அதன் பாரம்பரிய அடையாளத்தைப் பாதுகாக்கவும் முந்தைய திமுக அரசு புதிய நகர மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்திருந்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 18 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய 62.78 சதுர கிலோ மீட்டர் பரப்பில் காஞ்சிபுரம் புதிய நகரத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டது. காஞ்சிபுரத்தின் வரலாற்று மற்றும் பாரம்பரியப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான தனித் திட்டமும் இதில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் புதிய நகர மேம்பாட்டுத் திட்டத்தையும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டத்தையும் கைவிடுவதற்கான ஆணையை விஜய் அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி பணி ஆணை ரத்து
சென்னை செம்மஞ்சேரியில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரத்தை அமைப்பதற்கான திட்டத்தை முந்தைய திமுக அரசு அறிவித்தது.
80 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் சர்வதேசத் தரத்திலான கால்பந்து மைதானம், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தை மையங்கள், படகுப் போட்டி வசதிகள், சைக்கிள் மற்றும் ஸ்கேட்டிங் அரங்குகள், உள்விளையாட்டு அரங்குகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான விடுதிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்துக்காக RPP Infra Projects நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.205.89 கோடி மதிப்பிலான பணி ஆணையைத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தற்போது ரத்து செய்துள்ளது.
முந்தைய திட்டத்தைவிடப் பெரிய பரப்பில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் விரிவான விளையாட்டு நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக விஜய் அரசு தெரிவித்துள்ளது.
வளையபட்டி சிப்காட் திட்டம் இடமாற்றம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வளையபட்டியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க முந்தைய திமுக அரசு திட்டமிட்டிருந்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்று கூறி அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், வளையபட்டியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக நாமக்கல் மாவட்டத்திலேயே லத்துவாடி பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ECR உயர்மட்ட சாலை பணிகள் நிறுத்திவைப்பு
சென்னை திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை கிழக்குக் கடற்கரை சாலையில் 13 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்தை முந்தைய திமுக அரசு அறிவித்தது.
சுமார் ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிப்பாதையாக இந்த உயர்மட்டச் சாலையை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. நீலாங்கரை, அக்கரை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளையும் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர் இந்தத் திட்டத்தின் மதிப்பீடு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, பணிகளைத் தற்காலிகமாக நிறுத்துமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026–27 நிதியாண்டுக்கான நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், முந்தைய ஆண்டுகளில் இருந்து தொடரும் பணிகளின் பட்டியலிலும் இந்தத் திட்டம் இடம்பெறவில்லை.

கைவிடப்படுகிறதா மாமல்லன் நீர்த்தேக்கம்?
சென்னையின் தெற்குப் புறநகர் பகுதிகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக, செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்தை முந்தைய திமுக அரசு தொடங்கியது.
கோவளம் வடிநிலப் பகுதியில், கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடையே திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களை உள்ளடக்கிய பகுதியில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
ரூ.342.60 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 ஜனவரி 19-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
சுமார் 5,161 ஏக்கர் பரப்பில் அமையும் இந்த நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 1.65 டிஎம்சி. மானாமதி தொகுப்பைச் சேர்ந்த 69 ஏரிகளிலிருந்து கடலுக்குச் செல்லும் உபரிநீரைத் தேக்கி, ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வரை தண்ணீரைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது.
இதன் மூலம் சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 17 கோடி லிட்டர் குடிநீர் வழங்க முடியும் என்று திமுக அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், நீர்த்தேக்கம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள கோவளம்–நெம்மேலி பகுதி, கடல்நீரும் நன்னீரும் கலக்கும் முக்கியமான கடலோரச் சதுப்பு நிலம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
திட்டத்தால் அப்பகுதியின் மீன்வளம், வலசைப் பறவைகளின் வாழிடம் மற்றும் கடலோர மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சோழிங்கநல்லூர் மற்றும் திருப்போரூர் பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது தவெகவும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று பல்வேறு அமைப்புகள் விஜய் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில், மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கான கரை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திட்டத்தின் முதற்கட்டப் பணிகளில் சுமார் 15 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில், நீர்வளத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை உயரதிகாரிகளுடன் அரசு ஆலோசனை நடத்திய பிறகு பணிகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
20 பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் மறுடெண்டர்
முந்தைய திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் வழங்கப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களை விஜய் அரசு மறுஆய்வு செய்து வருகிறது.
திமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட 20 பணிகளுக்கு மறுடெண்டர் கோரப்பட்டதாகவும், புதிய டெண்டர்களில் திட்ட மதிப்பீடுகள் 20 முதல் 36 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆட்சியில் திட்ட மதிப்பீடுகள் அதிகரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த 20 பணிகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக அரசு தெரிவிக்கவில்லை. பழைய ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்பட்டு, குறைந்த மதிப்பீட்டில் மறுடெண்டர் கோரப்பட்டுள்ளன.
கேள்விக்குறியான பரந்தூர் மெட்ரோ திட்டம்
பூந்தமல்லியிலிருந்து சுங்குவார்சத்திரம் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க முந்தைய அரசு திட்டமிட்டிருந்தது.
மொத்தம் 53 கிலோ மீட்டர் தொலைவுக்கு 20 ரயில் நிலையங்களுடன் இந்த வழித்தடத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டது. திட்டத்தின் முதல் கட்டமாக பூந்தமல்லியிலிருந்து சுங்குவாரத்திரம் வரையிலான 28 கிலோ மீட்டர் வழித்தடத்துக்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஆரம்பப் பணிகளுக்கு ₹2,126 கோடி நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டது.
தற்போது பரந்தூர் விமான நிலைய இடம் கைவிடப்பட்டுள்ளதால், பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த மெட்ரோ திட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. சுங்குவாரத்திரத்துடன் வழித்தடம் நிறுத்தப்படுமா, புதிய விமான நிலையம் அமையும் இடத்தை நோக்கி மாற்றப்படுமா அல்லது புதிய வடிவில் தயாரிக்கப்படுமா என்பது தெளிவாகவில்லை.
மேலும் ஆறு புதிய நகரத் திட்டங்களின் நிலை என்ன?
திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, மறைமலைநகர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் புதிய நகரங்களை உருவாக்கும் திட்டங்கள் முந்தைய திமுக ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டன.
ஆனால், விஜய் அரசின் 2026–27 நகர்ப்புற வளர்ச்சித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இந்தத் திட்டங்கள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் புதிய நகரத் திட்டத்துக்கு மட்டுமே அதிகாரபூர்வமான கைவிடுதல் ஆணை வெளியாகியுள்ளது. மற்ற ஆறு புதிய நகரத் திட்டங்களும் ரத்து செய்யப்பட்டதாக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
