புதிய தலைமை செயலகம்.. 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு?

Published On:

| By Mathi

தலைமை செயலகம் மாற்றம்

New Secretariat: தமிழ்நாடு அரசுக்கான புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விஜய் அறிவிக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்ட முதல் கோட்டை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை (Fort St. George). இங்குதான் தற்போது தமிழக சட்டசபை செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

பிரித்தானிய பிரதிநிதிகளான ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ் டே ஆகியோரால் சென்னை கடற்கரைப் பகுதியில் நிலம் வாடகைக்குப் பெறப்பட்டு, 1640-களில் அடிக்கல் நாட்டப்பட்டு 1644-ல் இக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் வர்த்தக மையமாக இது உருவெடுத்தது.

காலப்போக்கில் பிரித்தானிய இந்தியாவின் தென்னிந்தியப் பிராந்தியத்தின் முக்கிய நிர்வாக மையமாக இது மாறியது. சுதந்திரத்திற்குப் பிறகு மெட்ராஸ் மாகாணம் (தமிழ்நாடு) அரசின் தலைமைச் செயலகமாக இது உருவெடுத்தது.

ADVERTISEMENT

கடந்த 2003-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கு தலைமைச் செயலகத்தை மாற்ற முயற்சித்தார். ஆனால் அப்போது மாணவிகள் கடுமையாக போராட்டம் நடத்தியதால் இந்த முயற்சியை ஜெயலலிதா கைவிட்டார்.

அதன்பின்னர், முன்னாள் முதல்வர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், 2011-ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார். ஓமந்தூரார் வளாகம் பின்னர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில், 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், புதிய தலைமைச் செயலகத்தை ஆளுநர் மாளிகைக்குச் சொந்தமான நிலத்திலோ, கிண்டி குதிரைப் பந்தயத் திடலிலோ அமைப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் எனப் பரிந்துரைத்தார். ஆனால், அதுதொடர்பாக அப்போதைய அரசு எந்த இறுதி முடிவையும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை இடமாற்றம் செய்யும் முயற்சியைத் தவெக அரசு மீண்டும் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்கனவே முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலர்களின் அலுவலகங்களை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், டிசம்பர் 15-ஆம் தேதிக்கு முன்பு இடமாற்றம் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகத்தை அமைப்பதற்காக சென்னையில் 3 இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

  • சென்னை சர்தார் பட்டேல் சாலையில் ஆளுநர் மாளிகை அருகே உள்ள கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகம்
  • பட்டினப்பாக்கம்
  • நந்தம்பாக்கம்

ஆகிய 3 இடங்களில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது.

இந்த இடங்களை பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.

110-வது விதியின் கீழ் அறிவிப்பு?

தற்போது தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், 110-வது விதியின் கீழ் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்த அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிடக் கூடும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share