பாஜகவுடன் எந்த சமரசமும் இல்லை : மு.க.ஸ்டாலின்

Published On:

| By Selvam

தற்போது நடப்பது ஸ்டாலின் ஆட்சி அல்ல, அண்ணாவும், கலைஞரும் சேர்ந்த திராவிட மாடல் ஆட்சி என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், அரசியல், கட்சி, ஆட்சி, உடல்நலம் என அனைத்து விஷயங்கள் பற்றியும் பேசியுள்ளார்.

நேர்காணலில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “கட்சிப் பணிகளில் தான் தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தேன். தற்போது முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பு ஆட்சிப் பணிகளிலும் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டம்,

காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் இந்த மூன்று திட்டங்கள் என்னுடைய வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய புரட்சிகரமான திட்டங்களாக நான் பார்க்கிறேன்.

cm mk stalin interview

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், ஐந்து லட்சம் கோடி கடன் வைத்து விட்டுச் சென்றுவிட்டார்கள்.

10 ஆண்டுகளாக மக்களுக்கு அவர்கள் எந்த திட்டங்களும் செய்யவில்லை. இந்த சூழ்நிலையில், நாங்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன 70 சதவிகித வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றியுள்ளோம்.

அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி என்று சொல்வது போல், நான் இதை ஸ்டாலின் ஆட்சி என்று சொல்ல விரும்பவில்லை. அண்ணாவும், கலைஞரும் சேர்ந்த ஒரு திராவிட மாடல் ஆட்சி இது.

எல்லோருக்கும் எல்லாம் அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சித்தாந்தமாக நாங்கள் வைத்துள்ளோம்.

cm mk stalin interview

தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாகத் தான், அடித்தள மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்த்தியுள்ளோம்.

தேசிய அரசியலை தீர்மானிக்கக்கூடிய கிங் மேக்கர் என்று கலைஞரைச் சொன்ன போது, என் உயரம் எனக்குத் தெரியும் என்று சொன்னார். அதே போலத் தான் என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்.

பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சி தலைவர்களிடம் தொடர்ந்து அரசியல் பேசி வருகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் வலுவாகப் பயணப்பட்டு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

2024ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே, பாஜக ஆட்சியை வீழ்த்த முடியும் என்று நான் ஏற்கனவே கூறியதை தான், மீண்டும் வலியுறுத்துகிறேன்.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். அதில் எந்த சமரசமும் இல்லை.

cm mk stalin interview

ஒன்றிய அரசு ஜிஎஸ்டி, புதிய கல்விக்கொள்கை என மாநில உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டிருக்கிறது.

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா என்னை தாக்கியபோது அதிலிருந்து உடனடியாக நான் மீண்டு வந்துவிட்டேன்.

அதற்கு காரணம், நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது தான் என்று மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

ஆட்சிக்கு வந்த பின்பு, உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஜிம் செல்கிறேன். மூன்று நாளைக்கு ஒரு முறை யோகா செய்கிறேன்.

நேரம் கிடைக்கும் போது மாலை நேரங்களில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்கிறேன். முதல்வராவதற்கு முன்பு வாரம் இருமுறை சைக்கிளிங் செல்வேன். இப்போது சைக்கிளிங் செல்ல முடிவதில்லை” என்று கூறினார்.

செல்வம்

திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி கெஜதீசன்: காரணம் என்ன?

முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர்கள் : ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share