கோவையில் சாப்பாடு பற்றாக்குறையால் ஏற்பட்ட மோதலில் வடமாநில தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள லவன் டெக்னோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் மற்றும் அவரது சகோதரர் ராஜேஷ் குமார் இவர்களுடன் இவர்களது நண்பர்களான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜகுமார் மண்டல் அவரது தந்தை நகுல் மண்டல், பிகாஷ் குமார், அவதேஷ் குமார் மண்டல், ரவிக்குமார் ஆகியோர் உடன் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தாங்கள் தங்கி இருந்த அறையிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி சமைக்கும் உணவை பகிர்ந்து உண்பதில் சிக்கல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு ராஜேஷ் குமார் மற்றும் ராகேஷ் குமார் ஆகியோர் அறையில் சாப்பிட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த அறையில் நண்பர்கள் மது குடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சாப்பிட வந்தபோது உணவு போதுமான அளவு இல்லாததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜகுமார் மண்டல் அங்கிருந்த கத்தியை எடுத்து ராகேஷ் குமார் கழுத்தில் குத்தி உள்ளார்.
இதில் படுகயாம் அடைந்த அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 15) ராகேஷ் குமார் உயிரிழந்தார்.
இது குறித்து உயிரிழந்த ராகேஷ் குமாரின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜகுமார் மண்டல் அவரது தந்தை நகுல் மண்டல், பிகாஷ் குமார், அவதேஷ் குமார் மண்டல், ரவிக்குமார் ஆகிய 5 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
