தமிழ்நாட்டில் உருமாற்ற கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை; பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் அல்ல; ஆனால் முக கவசம் அணிவது நல்லது என தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். No Major Impact from New Covid Variant
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறியதாவது: தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு 19 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வில் இவை வீரியம் இல்லாத கொரோனா வைரஸ் என்பது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. அதில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது.
இணைநோய் உள்ளவர்கள், முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது கட்டாயமாக்கப்படவில்லை. பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் அல்ல; ஆனால் மாஸ்க் அணிவது நல்லது.
தமிழ்நாட்டில் சிறப்பான மருத்துவமனை கட்டமைப்பு உள்ளது; அனைத்து மருத்துவமனைகளிலும் பிரத்யேக வார்டுகள் தயாராக உள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தல் வழக்கமான ஒன்றுதான்; பதற்றப்பட வேண்டியது இல்லை.
கொரோனா தொடர்பான வதந்திகள்தான் மிகப் பெரிய நோய். இந்த வதந்திகளைக் கிளப்பாமல் இருப்பதுதான் நல்லது. சென்னையில் கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்படும் முதியவருக்கு ஏற்கனவே பல நோய்கள் இருந்தன. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.