பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய போலி சாமியார் நித்யானந்தா தற்போது தலைமறைவாக இருக்கிறார். Nithyananda threatens indigenous people
கைலாசா எனும் நாட்டை உருவாக்கி அதற்காக தனிக்கொடி அமைச்சரவை, இணையதளம், நாணயம் ரிசர்வ் வங்கி என வரிசையாக வீடியோ வெளியிட்டார்.
இதையடுத்து நித்யானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவாடர் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானது. நித்யானந்தா தொடர்பான வழக்கில் தமிழக அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த தகவலை தெரிவித்திருந்தது.
ஈகுவாடரில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அந்த தீவை ’கைலாஷ்’ என்ற தனி நாடாக அறிவித்து இருப்பதாகவும் அந்த நாட்டிற்கு உரிமை கேட்டு ஐநாவிடம் அவர் விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.
ஆனால், நித்யானந்தாவுக்கு ஈகுவாடர் அடைக்கலம் தரவில்லை என அப்போதே ஈகுவாடர் தூதரகம் விளக்கம் அளித்திருந்தது.
இந்தநிலையில் பொலியாவில் பழங்குடியினரின் நிலத்தை ஏமாற்றி ஒப்பந்தம் போட்டது போல, ஈகுவாடரிலும் ஏமாற்றியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது, ஈகுவடாரில் அமேசான் காடுகளில் வாழும் பூர்வீக மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் கலாச்சாரம், நிலம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் போராடும் கூட்டமைப்பான “ஈகுவடார் அமேசானின் பழங்குடி தேசிய இனங்களின் கூட்டமைப்பு” (CONFENIAE) நித்யானந்தாவின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பு கூறுகையில், “ இங்கு 23 அமைப்புகள் உள்ளன. 11 விதமான தேசிய இனங்களைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், 2000 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு நாங்கள் ஒன்றை அறிவிக்கிறோம். கைலாசா என்ற நாடே கிடையாது. நித்யானந்தா என்ற சாமியார் பாலியல் வழக்கு, கிரிப்டோகரன்சி என பல வழக்குகளில் தேடப்படக்கூடிய குற்றவாளி.
இவர், கல்வி தருகிறோம், வீடு கட்டித் தருகிறோம், நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தருகிறோம் என்றெல்லாம் சொல்லி கிச்வா, வௌரானிஸ், ஷிவியர், அச்சுவர் ஆகிய பழங்குடி மக்களின் வாழ்விடத்தை 7000 டாலருக்கு 1000 ஆண்டுகள் குத்தகைக்கு நித்யானந்தா வாங்கியிருக்கிறார். இது இல்லாமல், இந்த நிலத்தை வாங்க எதிர்ப்புத் தெரிவித்த அங்கு இருக்க கூடிய பழங்குடின மக்களையும் ஆள் வைத்து மிரட்டினார்.
இதையடுத்து MREMH – MREMH -2024 -1528 OF என்ற ஒரு உத்தரவை கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பிறப்பித்தோம். அதில் கைலாசா என்ற நாடு இருப்பதாக நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இவரால் இங்கு அரசியல் மற்றும் சமூக பிரச்சினை ஏற்படலாம்.
நித்யானந்தா குரூப் எப்படி ஈகுவாடருக்குள் வந்தது. சட்ட ரீதியாக அவர்கள் எப்படி தங்கியிருக்கிறார்கள். நித்யானந்தா தேடப்படும் குற்றவாளியா? இல்லையா? . நித்யானந்தா சீடர்களின் நோக்க என்ன?இது பற்றியெல்லாம் ஆய்வு செய்ய சொல்லி எங்கள் துறை அமைச்சகத்திடம் கேட்டிருக்கிறோம்.
எங்களுடைய அமைப்புகள் மூலமாக, நம் சமூதாய மக்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது. நம்முடைய அரசியலமைப்பில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய அடிப்படை தகுதிகள் எல்லாம் நித்யானந்தா சீடர்களுக்கு இல்லை. இதுபற்றியெல்லாம் விசாரிக்க வேண்டும். நம்முடைய தேசத்துக்குள் வந்து , கைலாசா பெயரில் நம்முடைய நிலத்தை அபகரித்து நம்முடைய மக்களை இடம்பெயர செய்யக் கூடிய செயல்களை இந்த அமைப்பு ஈடுபட்டதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.
பொலிவியாவில் இப்படிதான் கல்வித் தருகிறோம், சுகாதார வசதி செய்துத் தருகிறோம் என்று அமேசான் காடுகளைச் சேர்ந்த பழங்குடி நிலத்தை நித்யானந்தா ஆக்கிரமித்தார். அந்த ஒப்பந்தம் செல்லாது என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. தற்போது இதே பாணியில் ஈகுவாடாரிலும் நித்யானந்தா வேலையை காட்டியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நித்யானந்தா மீது பாலியல் வழக்கு, அமலாக்கத் துறை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, குழந்தை கடத்தல் வழக்கு, வெவ்வேறு மாநிலங்களில் பல நில அபரிப்பு வழக்குகள் உள்ளன. இவரை இண்டர்போல் தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Nithyananda threatens indigenous people