Happy New Year 2026 : நாடு முழுவதும் ஆட்டம் பாட்டம் வாணவேடிக்கையுடன் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்ற மக்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மக்கள் மகிழ்ச்சியாக புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதோடு கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர்.

2025 ஆம் ஆண்டு விடைபெற்ற நிலையில் 2026 ஆம் ஆண்டை உலகம் முழுவதும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

உலகிலேயே முதலாவதாக 2026 ஆம் ஆண்டு கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது. உலகின் கிழக்குக் கோடியில் பசிபிக் கடலில் உள்ள சின்னஞ்சிறு தீவான கிரிபாட்டியில் இந்திய நேரப்படி நேற்று (டிசம்பர் 31) மாலை 3.38க்கு புத்தாண்டு பிறந்தது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு பிறந்தது. அங்கும் மக்கள் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

இதையடுத்து உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடாக புத்தாண்டை கொண்டாடியது.
இந்தியாவில் டெல்லி, மும்பை, புனே, சென்னை, பெங்களூ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடற்கரைகள், வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள் என மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் களைகட்டிய கொண்டாட்டம்

சென்னையில் மெரினா, எலியட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் இளைஞர்கள் புத்தாண்டை வரவேற்றனர். பாதுகாப்பு கருதி கடல் நீரில் இறங்க காவல்துறை தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கடற்கரை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை மாநகரம் முழுவதும் 19,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், கட்டுப்பாடுகளை மீறுதல் போன்றவற்றுக்கு கடும் நடவடிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

கோவை, மதுரை, திருச்சியில் உற்சாகம்

கோவையில் பொது இடங்கள், உணவகங்கள், ஹோட்டல்களில் இளைஞர்கள் குழுமி புத்தாண்டை கொண்டாடினர். பல இடங்களில் டி.ஜே. இசை, நடன நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு சிறப்பு நிகழ்வு நடைபெற்றன. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு தொடங்கிய போது நகரின் பல பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்ததோடு கேக் வெட்டி கொண்டாடினர். அருகில் இருந்தவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோல் மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பல குடும்பங்கள் கோவில்களில் தரிசனம் செய்து, புத்தாண்டை கொண்டாட்டத்தைத் தொடங்கினர்.

தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால், சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் வசதியாக பயணித்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

புத்தாண்டையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள தேவாலயங்கள், மற்றும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி கடற்கரையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் மக்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை முதல் பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 2026ம் ஆண்டு அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டும் என பொதுமக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share