நீட் தேர்வு குளறுபடி… போனஸ் மார்க் அறிவிப்பு! 

Published On:

| By Kavi

நீட் தேர்வு வினாத்தாளில் சரியான விடை இல்லாத கேள்விக்கு போனஸ் மார்க் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இளநிலை மருத்துவ படிப்புக்கு, 2026- 27ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்றது. 

ADVERTISEMENT

ஆனால், தேர்வுக்கு தயாரிக்கப்பட்ட வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டதால் இந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. 

இதைத்தொடர்ந்து மீண்டும் கடந்த ஜூன் 21 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. 

ADVERTISEMENT

இதை சுமார் 20 லட்சம் பேர் எழுதினார். இந்தியாவில் 551 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, மஸ்கட், சிங்கப்பூர் உள்ளிட்ட 14 வெளிநாடுகள் என சுமார் 5500 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் 307 மையங்களில் நடைபெற்ற தேர்வை, 1.20 லட்சம் பேர் எழுதினார். 

ADVERTISEMENT

இந்தத் தேர்வுக்கான முடிவுகளை ஜூலை 20ஆம் தேதி வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. 

இதற்கிடையே, மறு நீட் தேர்விலும் வினாத்தாளில் குளறுபடி நடந்தது மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

அதாவது இயற்பியல் வினாத்தாளில் இரண்டு தவறுகள் நடந்துள்ளன. இதில் வெர்னியர் காலிப்பிரஸ் குறித்த நாற்பதாவது கேள்வியில் கொடுக்கப்பட்ட நான்கு ஆப்ஷன்களும் தவறானவை. இதன் சரியான விடை 1.6 சென்டிமீட்டர் என்ற நிலையில் இது ஆப்ஷனில் இடம்பெறவில்லை. 

இதனால் இந்த கேள்வியை டிராப்ட் (dropped) என தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி இந்த கேள்விக்கு விடை எழுதியிருந்தாலும் எழுதாவிட்டாலும் நான்கு மதிப்பெண்கள் போனசாக வழங்கப்படும் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

அதேபோன்று 22 ஆவது கேள்விக்கு கொடுக்கப்பட்ட மூன்று மற்றும் நான்காவது ஆப்ஷன்கள் இரண்டுமே சரியானவை என்று தேர்வர்கள் கூறுகின்றனர். 

இதையும் ஒப்புக்கொண்ட தேசிய தேர்வு முகமை, அந்த இரண்டு ஆப்ஷனில் ஏதாவது ஒன்று எழுதி இருந்தால் அதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. 

இந்நிலையில், மாணவர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதிக்கும் தேசிய தேர்வு முகமை, வினாத்தாள் கசிவு, குளறுபடி இல்லாமல் தேர்வை நடத்த வேண்டும் என்றும் பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share