தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை நயன்தாராவை பாஜகவில் சேர வருமாறு திருச்செந்தூர் முருகன் முன்னிலையில் அழைப்பு விடுத்திருக்கிறார் பாஜக பிரமுகர் நரசிம்மன்.
அதற்கு புன்னகை பூத்துக் கொண்டே பதில் அளித்துள்ளார் நயன்தாரா.
தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கடந்த சில நாட்களாக தரிசனம் செய்து வருகிறார் நயன்தாரா.
நேற்று அவர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தபோது அங்கே எதேச்சையாக பாஜகவின் முக்கியப் பிரமுகரும் கிருஷ்ணகிரி முன்னாள் எம்பியுமான நரசிம்மனும் வழிபாட்டுக்காக சென்றிருக்கிறார்.
அப்போது நயன்தாராவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, உங்களைப் போன்றவர்கள் பாஜகவுக்கு வர வேண்டும் மோடியின் சேவைகளை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார் நரசிம்மன்.
அதற்கு புன்னகை பூத்துக் கொண்டே “பார்க்கலாம்” என்று பதிலளித்த நயன்தாரா நரசிம்மனின் தொடர்பு எண்ணையும் வாங்கிக்கொண்டார்.
சில நிமிடங்கள் கழித்து இருவரும் மீண்டும் கோயிலின் பின் பக்கத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போதும் நரசிம்மன் விடாப்பிடியாய் இதே வேண்டுகோளை வைக்க மீண்டும் புன்னகைத்து விட்டு விடை கொடுத்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் சன்னிதியில் மூக்குத்தி அம்மனை சந்தித்த நரசிம்மனிடம் பேசினோம்.
“பிரபலமானவர்கள், முக்கியமானவர்கள் யாரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களை பாஜகவுக்கு அழைத்து மோடியின் கரத்தை வலுப்படுத்துவதை என் கடமையாக கருதுகிறேன். அந்தவகையில் எதிர்பாராதவிதமாக தென்னிந்திய நட்சத்திரம் நயன்தாராவை சந்தித்தேன். அவரையும் பாஜகவுக்கு அழைத்தேன். நான் சந்தித்து இதுவரை யாரும் நெகட்டிவ் ஆக பதில் சொன்னதில்லை. அந்தவகையில் நயன்தாராவும் பாஜகவுக்கு வருவார் என்று நம்புகிறேன்”என்று கூறினார்.
அப்படியென்றால் பிரியங்கா சோப்ரா பிரதமரை சந்தித்தது போல நயன்தாராவும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டோம்.
“அப்படி ஒரு சந்திப்பு நிச்சயம் நடக்கும்”என்று நம்பிக்கை தெரிவித்தார் நரசிம்மன்.
