2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்கா வாழ் தமிழரான நவநீதம் பிள்ளை அம்மையாருக்கு தமிழக முதல்வர் விஜய், தமிழக முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும், நீதிக்காகவும் அயராது குரல் கொடுத்துவருபவரும், தென்னாப்பிரிக்காவாழ் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், 2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னாப்பிரிக்க மண்ணில் இனவெறிக்கு எதிரான சட்டப் போராட்டத்தின் வழியே தனது பயணத்தைத் தொடங்கி, அந்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் பதவி வகித்த திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது.
மனித உரிமைகள், சமத்துவம், நீதி மற்றும் உலக அமைதி ஆகிய உயரிய விழுமியங்களுக்காக அயராது பாடுபட்டுவரும் திருமதி நவநீதம் பிள்ளை அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: 2026-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள திருமிகு நவநீதம் பிள்ளை அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், குரலற்றவர்களின் உரிமைகளுக்காகவும் தமது வாழ்நாளையே அர்ப்பணித்த அவரது நெடிய பயணத்திற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது!
2012-ஆம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் அவரைச் சந்தித்து, ஈழத்தமிழர்களின் துயர்மிகுந்த வாழ்வையும், நீதிக்காகவும் கண்ணியமான வாழ்வுக்காகவும் அவர்கள் நடத்திவரும் போராட்டத்தையும் எடுத்துரைத்ததை இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.
நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தொடங்கி, உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பது வரை, துணிச்சலும் கொள்கை உறுதியும் நிறைந்தது அவரது பயணம்!
மனித உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் அவர் ஆற்றிவரும் பணி, வருங்காலத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்!
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: உலக அரங்கில் மனித உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் தொடர்ந்து பணியாற்றி வரும் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களுக்கு நோபல் அமைதிப் பரிசு கிடைத்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் வேர்களைக் கொண்ட ஒருவரின் மனிதத்திற்கான பயணத்தில், மனிதநேயத்திற்கும் நீதிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இந்த உயரிய நோபல் பரிசு வாயிலாக அங்கீகரிக்கப்படுவது பெருமைக்குரியது.
உலகெங்கும் அமைதி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட விழையும் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களின் அரும்பணி தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: உலக அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வாகி இருக்கும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திருமிகு.நவநீதம் பிள்ளை அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கும் நிறவெறி, ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுப்பதோடு – களப்போராட்டத்தையும் முன்னெடுத்து வரும் அவரது பணிகள் போற்றத்தக்கவை.
மனிதகுலத்தின் மேன்மைக்காகவும் – அமைதிக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள திருமிகு.நவநீதம் பிள்ளை அவர்களின் பணிகளைப் போற்றுவோம்.
அவருக்கு கிடைக்கவிருக்கும் ‘நோபல் பரிசு’, உலக அமைதிக்காக பாடுபட்டு வரும் ஒவ்வொருவருக்குமான ஊக்கமாக அமையட்டும்!
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்: உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை உயர்த்திய வரலாற்றுத் தருணம்! மனித உரிமைகளுக்காகவும் உலக நீதிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் சமரசமின்றிப் போராடி வரும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேச சட்ட மேதை நவநீதம் பிள்ளை அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கிறது.
நிறவெறி எதிர்ப்புப் போராட்டம் முதல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வரை அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பணிகள் நீதிக்கும் சமத்துவத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நவி பிள்ளை அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தென்னாப்பிரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தியாகும்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், உலக நாடுகளிடையே அமைதியையும் நீதியையும் நிலைநாட்டுவதிலும், சர்வதேச சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதிலும் அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க பணிகள் உலக அரங்கில் பாராட்டத்தக்கவை. அவரது சாதனை, உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்குப் பெருமையையும், இளைய தலைமுறையினருக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது.
உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை உயர்த்திய திருமதி நவநீதம் பிள்ளை அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதநேயம், நீதி மற்றும் உலக அமைதிக்கான அவரது உயரிய பணிகள் தொடர்ந்து சிறக்கவும், மேலும் பல சாதனைகள் படைக்கவும் எனது வாழ்த்துகள்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ள தென்னாப்பிரிக்கத் தமிழர் நவநீதம் பிள்ளைக்கு வாழ்த்து! 2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நோபல் அறக்கட்டளை அறிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது மிகவும் பொருத்தமானது. நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இப்பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய போது, இலங்கை போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக நவநீதம் பிள்ளை அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை நான் அறிவேன். இந்த விஷயத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அமைதிக்கான நவநீதம் பிள்ளை அவர்களின் பணிகள் தொடர எனது வாழ்த்துகள்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: 2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற திருமதி நவநீதம் பிள்ளை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி: 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள, இந்திய – தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திருமிகு. நவி பிள்ளை என்ற நவநீதம் பிள்ளை அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குக் குடிபெயர்ந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இவர், அங்கேயே பிறந்து வளர்ந்து சட்டக் கல்வி பயின்றார். தென்னாப்பிரிக்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய முதல் கறுப்பினப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.
வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் விளங்கிய இவர், தனக்காக மட்டுமன்றி அங்கு நிலவிய நிறவெறிக்கு எதிராகவும், உலக அளவில் மனித உரிமைப் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் (The Hague) நகரிலுள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாகச் செயல்பட்டதுடன், பெண்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதிலும் முன்னின்று செயல்பட்டுள்ளார். அமைதிக்கான இவரது சிறந்த சேவையைப் பாராட்டி, இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
