இப்படம் காட்டும் வனம் பயமுறுத்துகிறதா?
தமிழில் அவ்வப்போது காட்டுக்குள் பயணிக்கிற ஒரு கும்பலைக் காட்டுகிறவிதமாய் திரைப்படங்கள் வெளியாகும். பெரும்பாலும் அவை ஏதேனும் வெளிநாட்டுப் படங்களைப் பிரதியெடுத்ததாக இருக்கும். அதைத் தாண்டிச் சில தமிழ் மணத்தோடு வாசம் பரப்பும். அவற்றின் உள்ளடக்கமும் ஈர்க்கும்விதமாக இருக்கும்.
அவற்றுள் எந்த வகையில் சேரும் இப்படம் என்ற கேள்வியை எழுப்பியது ‘நறுவீ’. இரண்டாண்டுகளுக்கு முன்னர் ‘நறுவி’ என்ற திரைப்படம் வெளியான நிலையில், ஒரெழுத்தில் ‘நெடில்’ ஆக மாற்றி வித்தியாசப்படுகிறது இந்த டைட்டில்.
சரி, ‘நறுவீ’ தரும் திரையனுபவம் எத்தகையது?

வனப் பயணம்..!
பேராசைமிக்க ஒரு தொழிலதிபர். தனக்குச் சொந்தமான 300 ஏக்கர் இடத்தில் கிடைக்கிற காப்பிக் கொட்டைகளை மேம்படுத்தும் விதமாக ஒரு ஆய்வை மேற்கொள்ள விரும்புகிறார். அதற்காகத் தனது அலுவலகத்தில் இருக்கும் நான்கு பேரை அங்கு அனுப்புகிறார்.
அவர்களுக்கு உதவுவதற்காக, அலுவலகத்தால் ஒரு பெண் நியமிக்கப்படுகிறார். அவரது தாய்மாமன் ஒரு ஆசிரியர்.
அந்த நான்கு பேர் எந்த காட்டுக்குள் ஆய்வு மேற்கொள்ளச் செல்கிறார்களோ, பத்தாண்டுகளுக்கு முன்னர் அங்குள்ள பள்ளியில் தான் அவர் பணியாற்றியிருக்கிறார். ஒருமுறை காட்டுக்குச் சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை.
காணாமல் போனவராக அறியப்படுகிற தனது மாமா குறித்த உண்மைகளை அப்பெண் அறிய விரும்புகிறார்.
அதேநேரத்தில், அந்த குழுவுக்குத் தலைமை வகிக்கும் பெண்ணும் அந்த நபரைப் பற்றிய விவரங்களை அறிய விரும்புகிறார். காரணம், அவரது கல்லூரிக் காலத்து காதலர் அந்த நபர்.
வனப்பகுதியிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களை அழைத்துக்கொண்டு ஆய்வுக்குச் செல்வதே அவர்களது திட்டம். ஆனால், காட்டுக்குள் செல்லும் ஆண்கள் எல்லாம் மர்ம மரணம் அடைகின்றனர் எனச் சொல்லி எவரும் வரத் தயாராக இல்லை.
ஒருவழியாக, அதிகப் பணம் தருவதாகச் சொல்லி இரண்டு நடுத்தர வயதுப் பெண்களை அந்தக்குழு காட்டிற்கு அழைத்துச் செல்கிறது.
அப்போதே அந்தக் குழுவில் உள்ள ஒருபெண் தனது காதில் வித்தியாசமான சத்தங்கள் கேட்பதாக உணர்கிறார். அமானுஷ்யமான ஏதோ ஒரு சக்தியில் தாங்கள் பீடிக்கப்பட்டிருப்பது அவருக்குப் பிடிபடுகிறது.
ஆனால், அவரால் அதனை வெளியே சொல்ல முடிவதில்லை.
அவரைத் தடுக்கிற சக்தி எப்படிப்பட்டது? அந்த அமானுஷ்யமான சக்தியால் அந்த குழுவினருக்கு ஆபத்து ஏற்பட்டதா? காட்டுக்குள் காணாமல் போன நபர் என்ன ஆனார்? இப்படிச் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘நறுவீ’.
காட்டுக்குள் பயணம் மேற்கொள்கிற சிலர் என்ன ஆனார்கள் என்பதை நீட்டி முழக்கிச் சொல்கிறது இக்கதை.

என்ன சிறப்பம்சம்?
இப்படத்தில் நடித்தவர்களில் வின்சு ரேச்சல் சாம், பாடினி குமார், விஜே பப்பு ஆகியோரை ஓரிரு திரைப்படங்களில் ரசிகர்கள் கண்டிருக்கக் கூடும். அதற்கேற்ப அவர்களது நடிப்பு தேவையான அளவுக்குத் திரையில் தெரிகிறது.
டாக்டர் ஹரிஷ் இதில் நாயகனாகத் தோன்றியிருக்கிறார். முடிந்தவரை ஒரு ‘சாப்ட் பெர்சன்’ ஆகத் திரையில் தன்னை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். ஆனால், ரசிகர்களைக் கவர நடிப்பில் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும்.
வில்லனாக வரும் மதன் குமார் தனது தோற்றத்தால் மிரட்டுகிறார். ஆனால், அவர் வரும் காட்சிகள் ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்குத் திரைக்கதையில் பதில்கள் இல்லை.
ஜீவா ரவி, முருகானந்தம், பிரவீனா உட்படச் சிலர் இப்படத்தில் உண்டு. இவர்கள் தவிர்த்து இன்னும் சிலரும் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
பள்ளிச்சிறுமியாக வரும் சிறுமியின் கண்கள் அழகாக நடிக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் அவர் நாயகியாகவும் வலம் வரலாம். யார் கண்டது?
அஸ்வத் இசையில் பாடல்கள் கேட்கும்போதே, ‘மீண்டும் ஒரு முறை கேட்கலாம்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. பின்னணி இசையில் சில இடங்களில் மிரட்டியிருக்கிறார்.
ஆனந்த் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு சில இடங்களில் ரசிக்கும்படியாக இருக்கிறது. பெரிதாக பட்ஜெட் இல்லாவிடினும் அழகியலோடு ஒவ்வொரு ஷாட்டையும் ஆக்க வேண்டுமென்பதில் மெனக்கெட்டிருக்கிறார்.
குறிப்பாக, இரண்டு டூயட் பாடல்களைக் காட்சியாக்கம் செய்த விதம் அழகு.
கலை இயக்குனர் சி.கே.சத்யா சக்திவேல் தொடக்கப் பாடலுக்கு கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் புதுமுகம் சுபாரக். இவரே இதன் படத்தொகுப்பாளர்.
ஏற்கனவே ’555’, ‘வலியவன்’ உள்ளிட்ட சில படங்களில் இவர் படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார்.
இப்படத்தின் பாடல்களில் அந்த அனுபவம் தெளிவாகத் தெரிகிறது.
மிகச்சில பாத்திரங்கள், குறைந்தபட்சமான லொகேஷன்கள் என்றபோதும் இப்படத்தின் காட்சியாக்கத்தில் ‘சீர்மை’ தென்படுகிறது. குறிப்பாக டிஐ போன்ற விஷயங்கள் தெளிவாகக் கையாளப்பட்டிருப்பது இதன் சிறப்பு.
அதனால், பெரும்பாலான காட்சிகள் ஒரேமாதிரியான வண்ணக்கலவையைக் கொண்டிருக்கின்றன.
இப்படத்தில் கதை என்ற ஒரு வஸ்து இருக்கிறது. கல்வியறிவு அனைவரும் பெற வேண்டும் என்பதைச் சொல்ல முற்படுகிறது இப்படம். ஆனால், அதற்குப் பொருத்தமான காட்சிகள், திரைக்கதை ட்ரீட்மெண்ட் இருக்கிறதா என்று கேட்டால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
ஒரு திரைப்படத்தின் திரைக்கதை ட்ரீட்மெண்ட், காட்சியாக்கத்தை முடிவு செய்துவிட்டு பிறகு காட்சியமைப்பில் கவனம் செலுத்தியிருக்கிறதோ இப்படக்குழு என்ற சந்தேகமும் எழுகிறது.
ஏனென்றால், படம் முழுக்க ரசிகர்களைப் பயமுறுத்துகிற வகையில் வனம் காட்டப்பட்டிருக்கிறது. அமானுஷ்யமான சக்தியைக் காட்டுவதாகவும் சில ஷாட்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கான விளக்கத்தைத் தராமல் பிளாஷ்பேக் காட்சிகள் வேறேதோ திசையில் நகர்கின்றன. அதுவே இதனைச் சொல்லக் காரணம்.
’யார் வில்லன்’ என்று கேட்கும் அளவுக்கு இதில் அத்தரப்புக்கு விளக்கம் சரியாகத் தரப்படவில்லை. போலவே, நாயகனைப் பற்றிய முழுமையான சித்திரமும் இக்கதையில் கிடைக்கவில்லை.
அவை போதாது என்று பல தகவல்கள் அரையும்குறையுமாகத் திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவற்றைச் சரிப்படுத்தி, கொஞ்சம் திரைக்கதையை ‘பட்டி டிங்கரிங்’ பார்த்திருந்தால், இன்னும் செறிவான அனுபவத்தை இந்த ‘நறுவீ’ தந்திருக்கும்.
நறுவீ என்றால் மணமிக்க மலர் என்று அர்த்தமாம். இந்த படைப்பு நம்மிடத்தில் அப்படியொரு மலர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
