நான் முதல்வன் திட்டம்:  10 லட்சம் மாணவர்கள் இலக்கு!

Published On:

| By Minnambalam Desk

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் என்னென்ன மேம்பாடுகளை அந்தந்த கல்லூரிகளுக்கு செய்ய இயலும் என்பதை கண்டறிந்து அத்திட்டத்தினை மேலும், சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கோவி செழியன் கூறினார். naan mudhalvan scheme

அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதல்வர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 21) சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில், நடைபெற்றது

உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமை வகித்த இந்த கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் உயர்கல்வித் துறையின் வளர்ச்சிகள் குறித்து கல்லூரிகளின் முதல்வர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், வரவிருக்கும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கைக்கும் மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்தும் கல்லூரி முதல்வர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

நிகழ்வில் பேசிய அமைச்சர் கோவி செழியன், “கல்லூரி முதல்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிர்வாக பணியினை மட்டும் மேற்கொள்ளாமல், கல்விப்பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும், முதல்வர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

நமது கலாச்சாரம், வரலாறு, தமிழ் வளர்ச்சி போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து மாணவர்கள் இதனை அறிந்துகொள்ளும் வகையில், போதுமான கருத்தரங்குகள், கூட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்த வேண்டும்.

அதேபோல், மாணவர்களின் திறனை வளர்த்திட தற்போது முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட  ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் என்னென்ன மேம்பாடுகளை அந்தந்த கல்லூரிகளுக்கு செய்ய இயலும் என்பதை கண்டறிந்து அத்திட்டத்தினை மேலும், சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

மேலும், அடிப்படை பாடப் பிரிவுகளின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தும் அந்த பாடத்திட்டங்களில் தற்போதுள்ள தொழில்நுட்பத்திற்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏற்ப திருத்தி அமைத்து மாணவர்களுக்கு புதிய விழிப்புணர்வு அளிப்பது குறித்து தங்களின் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். naan mudhalvan scheme

நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களை மேம்படுத்துதல், தற்பொழுது க்யூட் என்ற பெயரில் இளங்கலை பட்டப்படிப்புக்கே நுழைவு தேர்வு மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சி செய்து கல்வியை ஒரு சாரார்க்கு மட்டுமே கொண்டு சேர்க்க முயற்சி செய்கிறது.  

UGC 2024 வரைவு அறிக்கையில், தொழிற்கல்வியிலிருந்து பொதுக் கல்விக்கு அல்லது பொதுக் கல்வியிலிருந்து தொழிற்கல்விக்கு இடம்பெயர்தல் மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய உதவாது. இது முற்றிலும் மாணவர்களின் நலனுக்கு எதிராகவே அமையும். சமூக நீதிக்கு எதிரானது. இதனை முதல்வர்கள் மாணவர்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

புதுமைப்பெண் திட்டம் (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம்) அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயில சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நாளது வரை 4.25 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்ப்புதல்வன் திட்டம் 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நாளது வரை 3.52 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

நான் முதல்வன் திட்டம் ஆண்டுதோறும் 10 லட்சம் மாணவர்களை திறன் வாய்ந்தவர்களாக உருவாக்கும் இலக்குடன் தொடங்கப்பட்ட இத்திட்டம் இதுவரை 14.68 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். வளாக வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் 2,58,597 மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்” என்று கூறினார். naan mudhalvan scheme

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share