இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தில் கடந்த சில நாட்களாக அதிகார மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.
டாடா சன்ஸ்- டாடா டிரஸ்ட்ஸ்

டாடா குழுமம் (Tata Group) என்பது பல்வேறு துறைகளில் செயல்படும் ஏராளமான நிறுவனங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய தொழில் குழுமமாகும். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா பவர், டைட்டன், இந்தியன் ஹோட்டல்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் முதன்மை பங்குதாரர் நிறுவனம் டாடா சன்ஸ் (Tata Sons).
இந்த டாடா சன்ஸில் சுமார் 66 சதவிகித பங்குகளை டாடா டிரஸ்ட்ஸ் (Tata Trusts) வைத்திருக்கிறது. அதாவது, டாடா சன்ஸ் தொழில் குழுமத்தின் மையமாக இருந்தாலும், அதன் மிகப்பெரிய பங்குதாரராக டாடா டிரஸ்ட்ஸ் இருக்கிறது.
இதனால் டாடா சன்ஸ் போர்டு ஒரு முடிவை எடுத்துவிட்டது என்பதாலேயே அனைத்து முக்கிய முடிவுகளும் முடிந்துவிடுவதில்லை. டாடா சன்ஸ் நிறுவனத்தின் சட்ட விதிகளில், டாடா டிரஸ்ட்ஸ் சார்பில் நியமிக்கப்படும் இயக்குநர்களுக்கு சில முக்கியமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது டாடா குழுமங்களிடையே வெடித்துள்ள பிரச்சினையின் மையமும் இதுதான்.
டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரனும், டாடா டிரஸ்ட்ஸ் தலைவராக நோயல் டாடாவும் பதவி வகிக்கின்றனர். சந்திரசேகரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். நோயல் டாடா, டாடா குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சந்திரசேகரனின் பதவிக்காலம்
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அவரது பதவி நீட்டிப்பு தொடர்பான விவாதம் டாடா குழுமத்துக்குள் ஏற்கெனவே தொடங்கியிருந்தது.
2025-ம் ஆண்டு ஜூலை 28 அன்று சந்திரசேகரனின் தலைமையைப் பாராட்டிய டாடா டிரஸ்ட்ஸ், அவரை மேலும் 5 ஆண்டுகள் செயல் தலைவராக நியமிப்பதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதாக டாடா சன்ஸ் கூறுகிறது.
இதனையடுத்து 2025-ம் ஆண்டு செப்டம்பரில் டாடா சன்ஸ் போர்டும், கொள்கை அளவில் சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நியமிக்க ஒப்புக்கொண்டது.
ஆனால் 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் சந்திரசேகரனின் பதவி நீட்டிப்புக்கு முறையான ஒப்புதல் பெற முயன்றபோது ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இங்கிருந்துதான் புதிய பிரச்சினை உருவானது.
மீண்டும் பதவி வேண்டாம் என்ற சந்திரசேகரன்
டாடா குழுமங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி சந்திரசேகரன் முக்கியமான முடிவை அறிவித்தார்.
தற்போதைய பதவிக்காலம் முடிந்த பிறகு மீண்டும் தலைவர் பதவிக்கு தன்னை முன்னிறுத்தப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.
இதனை டாடா டிரஸ்ட்ஸ் உடனடியாக ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது. அத்துடன் டாடா சன்ஸுக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான குழுவை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தொடங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது.
இந்தப் பின்னணியில் நோயல் டாடாவின் பெயரும் அடுத்த டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கான விவாதங்களில் இடம்பெற்றது. இருப்பினும், அவர் அடுத்த தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என்ற அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மீண்டும் சந்திரசேகரன் பெயர்
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 3-ந் தேதி டாடா சன்ஸ் நிறுவனத்தின் நியமனம் மற்றும் ஊதியக் குழு கூடியது. சந்திரசேகரனின் பங்களிப்பு மற்றும் டாடா குழுமத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, மீண்டும் தலைவர் பதவிக்கு வருவதில்லை என்ற தனது முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் டாடா சன்ஸ் தலைவராக மீண்டும் சந்திரசேகரனையே நியமிக்க போர்டுக்கு பரிந்துரை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 17-ந் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் போர்டு கூட்டத்தில், சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு தலைவராக நியமிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்தக் கூட்டத்திலேயே டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் போர்டில் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் சந்திரசேகரனை மீண்டும் நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக டாடா சன்ஸ் தெரிவித்தது.


டாடா டிரஸ்ட்ஸ் எதிர்ப்பு ஏன்?
இங்குதான் தற்போது மிகப்பெரிய மோதல் வெடித்துள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டும் டாடா டிரஸ்ட்ஸ், சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பு செல்லாது என்று கூறுகிறது.
டாடா டிரஸ்ட்ஸ் தரப்பு விளக்கத்தின்படி, தலைவர் நியமனம் அல்லது மறுநியமனம் போன்ற முக்கிய முடிவுகளுக்கு டாடா சன்ஸ் போர்டில் கிடைக்கும் சாதாரண பெரும்பான்மை மட்டும் போதாது.
டாடா டிரஸ்ட்ஸ் சார்பில் டாடா சன்ஸ் போர்டுக்கு நியமிக்கப்பட்ட இயக்குநர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவும் கட்டாயம் என்பது அதன் நிலைப்பாடு.

தற்போது டாடா டிரஸ்ட்ஸ் சார்பில் டாடா சன்ஸ் போர்டில் நோயல் டாடா மற்றும் வேணு சீனிவாசன் ஆகிய இருவர் நியமன இயக்குநர்களாக இருக்கின்றனர்.
சந்திரசேகரனின் பதவி நீட்டிப்புக்கு வேணு சீனிவாசன் ஆதரவு தெரிவித்த நிலையில், நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்தார்.
இரண்டு நியமன இயக்குநர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அவர்களிடையே பெரும்பான்மை ஆதரவு கிடைக்க வேண்டுமென்றால் இருவரும் ஆதரிக்க வேண்டும். ஆனால் ஒருவர் எதிர்த்துவிட்டதால் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது டாடா டிரஸ்ட்ஸின் வாதம்.
எனவே ஒட்டுமொத்த டாடா சன்ஸ் போர்டில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருந்தாலும், டாடா டிரஸ்ட்ஸ் நியமன இயக்குநர்களின் தேவையான ஆதரவு இல்லாததால் சந்திரசேகரனின் மறுநியமனம் செல்லாது என டாடா டிரஸ்ட்ஸ் கூறுகிறது.
கூடுதல் வாக்காலும் மாற்ற முடியாது
இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கியமான அம்சமாக இருப்பது, கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவருக்கு வழங்கப்படும் கூடுதல் வாக்கான ‘Casting Vote’. ஆனால் இந்த வாதத்தையும் டாடா டிரஸ்ட்ஸ் நிராகரித்துள்ளது.
ஒரு போர்டு கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஆதரவு மற்றும் எதிர்ப்பு வாக்குகள் சமமாக இருக்கும்போதுதான் தலைவரின் கூடுதல் வாக்கைப் பயன்படுத்த முடியும். ஆனால் டாடா டிரஸ்ட்ஸ் சார்பில் நியமிக்கப்பட்ட இயக்குநர்களின் பெரும்பான்மை ஆதரவு என்பது தனியாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனை என டாடா டிரஸ்ட்ஸ் கூறுகிறது.
எனவே நோயல் டாடா எதிராகவும், வேணு சீனிவாசன் ஆதரவாகவும் வாக்களித்த நிலையில் ஏற்பட்ட சூழ்நிலையை தலைவரின் கூடுதல் வாக்கைப் பயன்படுத்தி மாற்ற முடியாது என்பது டாடா டிரஸ்ட்ஸின் நிலைப்பாடு.
இதனடிப்படையில் சந்திரசேகரனை மீண்டும் டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கும் தீர்மானம் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், அந்தத் தீர்மானத்துக்கு சட்டரீதியான மதிப்பு இல்லை என்றும் டாடா டிரஸ்ட்ஸ் இன்று (செப்டம்பர் 20) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு படி மேலே சென்று, அந்தத் தீர்மானம் தொடக்கத்திலிருந்தே செல்லாதது என்ற பொருளில் சட்டத்தில் பயன்படுத்தப்படும் ‘Void ab initio’ என்ற வார்த்தையையும் டாடா டிரஸ்ட்ஸ் பயன்படுத்தியுள்ளது.

மீண்டும் வந்த சைரஸ் மிஸ்திரி வழக்கு
இந்த மோதலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முந்தைய சைரஸ் மிஸ்திரி விவகாரமும் தற்போது மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2016-ம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நீண்ட சட்டப்போராட்டம் நடைபெற்றது.
அந்த வழக்கிலும் டாடா டிரஸ்ட்ஸ் சார்பில் டாடா சன்ஸ் போர்டுக்கு நியமிக்கப்பட்ட இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வாக்குரிமை உள்ளிட்ட அதிகாரங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.
அப்போது டாடா சன்ஸ் நிறுவன விதிகளில் டாடா டிரஸ்ட்ஸ் நியமன இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இந்த உரிமைகளை உச்சநீதிமன்றம் வரை சென்று டாடா சன்ஸ் பாதுகாத்தது.
டாடா சன்ஸில் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட்ஸின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட உரிமைகள் இவை என்பதும் அப்போது டாடா சன்ஸ் முன்வைத்த முக்கியமான வாதங்களில் ஒன்றாக இருந்தது. இதைத்தான் தற்போது டாடா டிரஸ்ட்ஸ் திருப்பிப் பயன்படுத்துகிறது.
சைரஸ் மிஸ்திரி வழக்கின்போது டாடா டிரஸ்ட்ஸ் நியமன இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாத்த டாடா சன்ஸ், சந்திரசேகரன் பதவி நீட்டிப்பு விவகாரத்தில் அதே உரிமைகளைப் புறக்கணிக்க முடியாது என்பது டாடா டிரஸ்ட்ஸின் வாதம்.

முன்னாள் தலைமை நீதிபதி கருத்து
சந்திரசேகரன் பதவி நீட்டிப்பு தொடர்பான இந்தச் சட்டச் சிக்கலில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் சட்டக் கருத்தையும் டாடா டிரஸ்ட்ஸ் தரப்பு பெற்றுள்ளது.
சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நியமிக்கும் தீர்மானம் நிறைவேறுவதற்கு டாடா டிரஸ்ட்ஸ் சார்பில் நியமிக்கப்பட்ட இரண்டு இயக்குநர்களின் ஆதரவும் தேவை என்ற டாடா டிரஸ்ட்ஸின் நிலைப்பாட்டுக்கு சந்திரசூட்டின் சட்டக் கருத்து ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17-ந் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் போர்டு கூட்டத்திலும் இந்த சட்டக் கருத்தை நோயல் டாடா முன்வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் சாதாரணமாகத் தொடங்கிய சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பு விவகாரம், தற்போது டாடா சன்ஸ் போர்டின் பெரும்பான்மை முடிவா அல்லது 66 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட்ஸுக்கு நிறுவன விதிகள் வழங்கியுள்ள சிறப்பு உரிமைகளா? என்ற பெரிய நிறுவன சட்ட மோதலாக உருவெடுத்துள்ளது.
தற்போதைய நிலையில் டாடா சன்ஸ், சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு தலைவராக நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக கூறுகிறது. மறுபுறம், அந்தத் தீர்மானமே சட்டப்படி செல்லாது என டாடா டிரஸ்ட்ஸ் கூறுகிறது.
எனவே சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பு உறுதியாகிவிட்டது என்றோ, அவரது பதவி நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றோ இப்போதைக்கு இறுதி முடிவாகக் கூற முடியாது. டாடா குழுமங்களிடையேயான இந்த மோதல் அடுத்தகட்டத்தில் சட்டப்போராட்டமாக மாறுமா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வி.
