இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மேலும் 5 ஆண்டுகள் பதவியில் தொடர அக்குழுமத்தின் போர்டு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற டாடா சன்ஸ் நிறுவனத்தின் போர்டு கூட்டத்தில், சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன், டாடா குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். 1987-ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் இணைந்த அவர், பின்னர் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக உயர்ந்தார்.
2016 அக்டோபரில் டாடா சன்ஸ் வாரியத்தில் இணைந்த சந்திரசேகரன், 2017 ஜனவரியில் டாடா சன்ஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். 2017 பிப்ரவரி 21-ஆம் தேதி பொறுப்பேற்றார். அதன்பிறகு 2022-ஆம் ஆண்டு அவருக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அந்த 2-வது பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் தனது தற்போதைய பதவிக்காலத்திற்குப் பிறகு மீண்டும் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று சந்திரசேகரன் தெரிவித்திருந்தார்.
தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டாடா சன்ஸ் வாரியம் அவருக்கு புதிய 5 ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
என்ன நடந்தது?
சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பது தொடர்பான விவகாரம் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே டாடா குழுமத்திற்குள் விவாதிக்கப்பட்டது.
தனது பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதன்பிறகு மீண்டும் தலைவர் பதவிக்கு தன்னை முன்னிறுத்திக் கொள்ளப் போவதில்லை என்று கடந்த ஆகஸ்ட் மாதம் சந்திரசேகரன் டாடா சன்ஸ் வாரியத்திடம் தெரிவித்தார்.
அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், டாடா குழுமத்தில் தனது 40 ஆண்டுகால தொழில் வாழ்க்கையை குறிப்பிட்டிருந்தார். டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொறுப்பு என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், டாடா சன்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனத்தில் பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், 2027 பிப்ரவரிக்குப் பிறகு குழுமத்தை யார் வழிநடத்தப் போகிறார் என்பதில் முன்கூட்டியே தெளிவு ஏற்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். ஊழியர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தலைமை குறித்த தெளிவு அவசியம் என்பதால், அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவில் தொடங்குமாறும் வாரியத்தை கேட்டுக் கொண்டார்.
புதிய தலைவரை தேர்வு செய்ய குழு
சந்திரசேகரனின் இந்த முடிவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி டாடா டிரஸ்ட்ஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
2027 பிப்ரவரி 20-ஆம் தேதிக்குப் பிறகு பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்ற சந்திரசேகரனின் முடிவை மதிப்பதாக தெரிவித்த டாடா டிரஸ்ட்ஸ், டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவை அமைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியது.
இதனால் சந்திரசேகரனுக்குப் பிறகு இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தை யார் வழிநடத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.
ஆனால், ஒரு மாதத்திற்குள் நிலைமை மாறியுள்ளது. இன்று நடைபெற்ற டாடா சன்ஸ் போர்டு கூட்டத்தில் சந்திரசேகரனையே மேலும் 5 ஆண்டுகள் தலைவர் பதவியில் தொடரச் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
