இண்டிகோ விமானத்தில் பயணிக்கும் குழந்தைகள் மற்றும் கூடுதல் சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
விமானக் கட்டணத்துடன் சேர்த்து பயணிகள் விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்தும் சில சேவைகளுக்கான கட்டணங்களை விமான நிறுவனம் திருத்தியுள்ளது.
3 நாட்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.2,000-லிருந்து ரூ.3,000 ஆக உயர்ந்துள்ளது.
குழந்தைக்கு தனி இருக்கை வழங்கப்படாத போதிலும், அவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
தனியாகப் பயணிக்கும் குழந்தைகளுக்கும் கட்டணம் அதிகரிப்பு
பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாமல் பயணிக்கும் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான Unaccompanied Minor சேவைக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானங்களில் இந்தக் கட்டணம் ரூ.5,000-லிருந்து ரூ.5,999 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச விமானங்களில் இந்தச் சேவைக்கு ரூ.12,999 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான பேக்கேஜுக்கு இனி கூடுதல் செலவு
பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுத்துச் செல்லும் ஒவ்வொரு கிலோ பேக்கேஜுக்கும் இனி ரூ.800 செலுத்த வேண்டும். இதற்கு முன்பு ஒரு கிலோவுக்கு ரூ.700 வசூலிக்கப்பட்டது.
அதாவது, 5 கிலோ கூடுதல் பேக்கேஜ் எடுத்துச் சென்றால் முன்பு ரூ.3,500 செலுத்திய நிலையில், தற்போது ரூ.4,000 செலவாகும்.
Priority சேவைகளுக்கும் புதிய கட்டணம்
Fast Forward எனப்படும் முன்னுரிமை செக்-இன் மற்றும் போர்டிங் சேவைக்கான உள்நாட்டு விமானக் கட்டணம் ரூ.450-லிருந்து ரூ.650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச விமானங்களில் ஒரு செக்டருக்கு ரூ.850 கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும், பயணச் சான்றிதழுக்கான கட்டணமும் ரூ.200-லிருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மாற்றங்கள் இண்டிகோவின் கூடுதல் பயணிகள் சேவைகளுக்கான வழக்கமான கட்டண மறுஆய்வின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
